கடந்த 3ஆம் தேதி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடத்தப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை பேரணியில் வன்முறை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.


மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் நடத்திய ஒற்றுமை பேரணியில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. இதுவரை, 9,000 பேர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.


இந்த கலவரம் நாட்டையே உலக்கி எடுத்த நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து ஆலோசனை செய்ய மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் 4 பேர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளனர்.


மாநிலத்தில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடனான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


மெய்டீஸ் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினருக்கு இடையேயான சமீபத்திய வன்முறை மோதல்களை அடுத்து, மணிப்பூரில் உள்ள Chin-Kuki-Mizo-Zomi குழுவைச் சேர்ந்த 10 பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பிராந்தியத்திற்கு தனி நிர்வாக அந்தஸ்து அளிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இச்சூழலில், முதலமைச்சர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.


இந்த கோரிக்கையை விடுத்த 10 சட்டமன்ற உறுப்பினர்களில் 7 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் குக்கி மக்கள் கூட்டணியையும் (கேபிஏ) ஒருவர் சுயேட்சை ஆவர். இந்த இரண்டு கேபிஏ மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.


நான்கு கேபினட் அமைச்சர்களான டி. பிஸ்வஜித், ஒய். கேம்சந்த், கே. கோவிந்தாஸ், டி. பிரசாந்தா ஆகியோர் முதலமைச்சருடன் டெல்லி சென்றனர். அவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் ஏ சாரதாதேவியும் டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது.


மணிப்பூரில் என்ன பிரச்சினை?


மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.


இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.


பழங்குடியினரின் கோரிக்கைதான் என்ன?


"மனுப்பூரில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட வருடங்களாக போராடி வருகின்றன" என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் நான்கு வார காலம், அவகாசம் வழங்கியது மணிப்பூர் உயர் நீதிமன்றம்.


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடிக்க மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது.