மாநில அரசுப் பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசுப் பொறுப்புகளுக்கு அழைத்துக் கொள்ளலாம் என்கிற சட்டதிருத்தத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. அப்படி மாற்றும் சூழலில் மாநில அரசு மத்திய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலை அனுப்புமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டிருந்தது.
இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் இந்த முடிவு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனக் கூறியுள்ளார். மாநில அரசு மறுத்தாலும் மத்திய அரசு அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்துக் கொள்ளலாம் என அந்தச் சட்டத்திருத்தம் குறிப்பிடும் நிலையில் மம்தா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக மம்தா தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றது குறித்து கருத்து கூறியிருந்த அவர் இந்திராகாந்தியை போல மோடியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, “இந்திராகாந்தி மிகவும் சக்திவாய்ந்த தலைவர். ஆனால் அவர் பிரகனப்படுத்திய எமெர்ஜென்சி மக்களை சென்றடைந்தது. 1977 ஆம் ஆண்டு இந்திரா மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரை மக்கள் மன்னிக்கவில்லை. நமது பிரதமர் தற்போது விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் பலனில்லை. மக்கள் அவரை மன்னிக்கமாட்டார்கள்.எந்தவொரு விவாதமும் இல்லாமல் தற்போது வேளாண் சட்டங்களை பிரதமர் ரத்து செய்துள்ளார். ஏன் அவர் வேளாண் சட்டங்களை ரத்து செய்தார். ஏனென்றால் உத்தரப்பிரதேச தேர்தல்தான் காரணம். எல்லோருக்கும் அது தெரியும். பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாகி விடும்”” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையேதான் தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பொறுப்புகளில் நியமித்துக் கொள்வது தொடர்பான சட்டத்திருத்தம் குறித்தும் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.