அரசியலமைப்பை மத்திய அரசு மாற்றி விட கூடும் என நாங்கள் பயப்படுகின்றோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு:
டெல்லியில் அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில், அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை தோற்கடிக்க பிற மாநிலங்களிடம் இருந்து, ஆதரவு கோரும் பணியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். இதற்காக, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகருக்கு இன்று சென்ற அவர், அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, நேரில் சந்தித்து பேசினார்.
அவருடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் மற்றும் ஆம் ஆத்மியின் பிற தலைவர்களும் சென்றிருந்தனர். இந்த சந்திப்பில், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதில், டெல்லியில் அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் அரசுக்கு ஆதரவு தரும்படி அரவிந்த் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அச்சம்:
இந்த சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இந்த அரசாங்கம், மத்திய அமைப்புகளின், மத்திய அமைப்புகளால் மற்றும் மத்திய அமைப்புகளுக்கான அரசாக உருமாறி உள்ளது. அரசியலமைப்பை மத்திய அரசு மாற்றி விட கூடும் என நாங்கள் அச்சப்படுகிறோம் என்று தெரிவித்தார். நாட்டின் பெயரை கூட அவர்கள் மாற்றி விடுவார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கூட அவர்கள் மதிக்கவில்லை என மம்தா கூறியுள்ளார்.
பா.ஜ.க.விற்கு போகக்கூடாது:
ஆளுநர்கள், அவசர சட்டம் மற்றும் கடிதங்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசே ஆட்சி செய்யும். அதனால், அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் ஒன்றாக பணியில் ஈடுபட முடியுமென்றால், ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு போக விட கூடாது. ஒவ்வொருவரும், இந்த அவசர சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. அல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் மம்தா பானர்ஜி.
அவசர சட்டம்:
முன்னதாக டெல்லியில் ஐ.,ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கும் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கா? அல்லது ஆளுநருக்கா? என்ற வாதம் எழுந்தது. அப்போது, இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த 11-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தவும், அதற்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவசர சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதலமைச்சர் தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை ஆளுநருக்கு மீண்டும் அதிகாரம் அப்பதற்கு இந்த அவசர சட்டம் வழி வகை செய்கிறது. இந்நிலையில், கெஜ்ரிவாலை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இரு தினங்களுக்கு முன் கொஜ்ரிவாலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை வழங்கினார்.