மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு பெரும் பின்னடவு ஏற்படும் வகையில் ஒரு அரசியல் நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
மம்தா திட்டம்:
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. மேற்குவங்கத்தின் முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா, கடந்த சில மாதங்கள் முன்பு வரை பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தார்.
ஆனால், அவருடைய கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை சோதனை நடத்தியதை தொடர்ந்து, அவரின் செய்லபாட்டில் மாற்றம் தெரிய தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக, பாஜகவை போன்றே காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்க தொடங்கினார். இந்நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மம்தாவை இன்று சந்தித்து பேசியுள்ளார். அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த சந்திப்பு கொல்கத்தாவில் நடந்தது.
இதை தொடர்ந்து, பிஜு ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கை மம்தா அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். பாஜகவை போன்றே காங்கிரஸை எதிர்க்க இந்த மூன்று முக்கிய தலைவர்களும் முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு:
எதிர்க்கட்சிகளின் தலைவராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் முயன்று வரும் சூழலில், இந்த மூன்று தலைவர்களின் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தி விவகாரத்தை முன்வைத்து தங்களை டார்கெட் செய்ய பாஜக முயல்வதாக எதிர்கட்சிகள் நினைக்கின்றன.
இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சுதீப் பந்தோபாத்யாய் கூறுகையில், "ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தை செயல்பட விடமாட்டார்கள். காங்கிரஸைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் செயல்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதே இதன் பொருள்.
பா.ஜ.க.வுக்கு உதவும் வகையில் ராகுல் காந்தி (எதிர்க்கட்சியின்) முகமாக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக்கை மார்ச் 23ஆம் தேதி சந்திக்கிறார். பாஜகவை எதிர்ப்பது போல காங்கிரஸை எதிர்க்க மற்ற எதிர்க்கட்சிகளுடன் விவாதிப்போம். மூன்றாவது அணி என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், பாஜகவை எதிர்கொள்ளும் வலிமை பிராந்திய கட்சிகளுக்கு உள்ளது" என்றார்.