லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம், இந்திய - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றவே இந்திய பிரதமர் மோடி, அங்கு சென்றதாக மாலத்தீவு அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். அதோடு நின்றுவிடாமல், பல ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர்.
இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கிடையே என்ன பிரச்னை?
மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ், மாலத்தீவு அமைச்சர்கள் அப்துல்லா மஹ்சூம் மஜீத், மரியம் ஷியூனா ஆகியோர், இந்தியாவுக்கு எதிராக கடுமையாக பேசினார். மாலத்தீவு எம்பியும் அமைச்சரும் தெரிவித்த கருத்து இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரும் அழுத்தத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பேசிய 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது முய்சு.
தேர்தல்போதே, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் முகமது முய்சு. மாலத்தீவு அதிபராக அவர் பதவியேற்ற உடனேயே, இந்திய ராணுவத்தை வெளியேற்ற உத்தரவிட்டார். முய்சுவின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இது தொடர்பான முடிவை, மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இந்தியாவுக்கு காலக்கெடு விதித்த மாலத்தீவு:
இந்த நிலையில், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற காலக்கெடு விதித்துள்ளார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு.
மார்ச் 15ஆம் தேதிக்குள், இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை பொது கொள்கை செயலாளர் அப்துல்லா நாஜிம் இப்ராஹிம் கூறுகையில், "இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்க கூடாது. அதிபர் டாக்டர் முகமது முய்சுவின் கொள்கையும் இந்த நிர்வாகத்தின் கொள்கையும் இதுதான்" என்றார்.
இந்திய படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாலத்தீவும் இந்தியாவும் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு தனது முதல் கூட்டத்தை இன்று காலை மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மஹாவாரும் கலந்து கொண்டார்.
மாலத்தீவு - இந்திய நாடுகளுக்கு கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றார். மாலத்தீவு, சீன நாடுகளுக்கு இடையே பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சீனாவில் இருந்து மாலத்தீவுக்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்ப வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கேட்டு கொண்டார்.