பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொடூர குற்ற செயல்கள் அதிகரித்திருப்பது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் பூனாவாலாவே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி காட்டில் எறிந்ததார். இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.


இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதாகவும், அவர்களுக்கிடையே பண பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.


ஒரே பாணியல் தொடரும் கொலைகள்:


ஷ்ரத்தா கொலை வழக்கு பாணியில் நாட்டின் மற்ற பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சமூகத்தில் உள்ள பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அந்த வதையில், மும்பை அருகே நடந்த லிவ்-இன் பார்ட்னர் கொலைக்கும் ஷ்ரத்தா கொலைக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.


மும்பையில் 37 வயது பெண் மேகா என்பவர், தனது காதலன் ஹர்திக்குடன் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்துள்ளார். மும்பை அருகே வீட்டை வாடகை எடுத்து தங்கியுள்ளனர். ஹர்திக் வேலையில்லாமல் இருந்துள்ளார்.


மேகா ஒரு செவிலியர். வீட்டுச் செலவுகளை பார்த்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுவே, கொலையில் முடிந்தது.


அவரது உடலை வாடகை வீட்டில் உள்ள படுக்கையின் கீழே மறைத்து வைத்துள்ளார். மேகாவைக் கொன்ற பிறகு, ஹர்திக் சில வீட்டுப் பொருட்களை விற்றுவிட்டு பணத்துடன் தப்பினார். அவர் ரயிலில் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அவரது இருப்பிடத்தை கண்காணித்து, ரயில்வே போலீசார் அவரை மத்திய பிரதேச மாநிலம் நாக்டாவில் கைது செய்தனர்.


மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த ஹர்திக்கும், மேகாவும் கடந்த 6 மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறினர். இவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்படுவதாக அக்கம்பக்கத்தினரும் புகார் கூறினர்.


டெல்லி கொலை:


ஷ்ரத்தா, மும்பை கொலை வழக்கை போன்று, டெல்லியில் இளம்பெண் ஒருவரை அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே கேபிள் வயரை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஷ்ரத்தா கொலை வழக்கைப் போன்று, 24 வயதான சாஹில் கெலாட், தனது காதலியைக் கொலை செய்து அதை மறைக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காதலி நிக்கி யாதவை வாக்குவாதத்திற்குப் பிறகு கொலை செய்துள்ளார். மேலும், தன்னுடைய குடும்பத்தினருக்கு சொந்தமான உணவகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் உடலை மறைத்து வைக்க முடிவு செய்திருக்கிறார்.


இதில், தற்போது வெளியான அதிர்ச்சி தகவலின்படி, கொலை நடந்த அதே நாளில் சாஹில் கெலாட், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.