Just In





பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
மபியில் சுகாதார மையம் ஒன்றில் கர்ப்பிணிக்கு இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்க மூன்றாவது முறையாக தள்ளுவண்டியில் அந்த பெண் அழைத்து வரப்படும்போது, நடுவழியிலேயே அந்த குழந்தை பிறந்துள்ளது. துரதிஷ்டவசமாக பிறந்த ஒரு சில மணி நேரத்திலேயே அந்த குழந்தை உயிரிழந்தது.

மத்தியப் பிரதேசத்தில் சுகாதார மையம் ஒன்றில் கர்ப்பிணி பெண்ணுக்கு இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சேர்க்க மூன்றாவது முறையாக தள்ளுவண்டியில் அந்த பெண் அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால், நடுவழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. துரதிஷ்டவசமாக பிறந்த ஒரு சில மணி நேரத்திலேயே அந்த குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பச்சிளம் குழந்தை மரணம்:
முறையான மருத்துவமனைகள் இல்லை, முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என அரசு மருத்துவமனையை நோக்கி தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் ரட்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுகாதார மையம் ஒன்றில் கர்ப்பிணி பெண்ணுக்கு இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்க மூன்றாவது முறையாக தள்ளுவண்டியில் அந்த பெண் அழைத்து வரப்படும்போது, நடுவழியிலேயே அந்த குழந்தை பிறந்துள்ளது. துரதிஷ்டவசமாக பிறந்த ஒரு சில மணி நேரத்திலேயே அந்த குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து சைலானா மாவட்ட துணை ஆட்சியர் மணீஷ் ஜெயின் கூறுகையில், "கடந்த மார்ச் 23 ஆம் தேதி காலை 9 மணிக்கு, சைலானாவில் உள்ள காளிகா மாதா மந்திர் சாலையில் வசிக்கும் கிருஷ்ணா குவாலா, தனது மனைவி நீதுவை சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவமனையின் அலட்சியம் காரணமா?
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு பிரசவம் நடக்கும் என்று கூறி அங்கிருந்த செவிலியர் சேத்னா சாரல், அவர்களை திருப்பி அனுப்பி வைத்தார். அதிகாலை 1 மணிக்கு, அவருக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த முறை செவிலியர் காயத்ரி படிதர் என்பவர், நீதுவை பரிசோதித்த பிறகு மீண்டும் அனுமதிக்க மறுத்துவிட்டார். 15 மணி நேரத்திற்குப் பிறகே பிரசவம் நடக்கும் என்று கூறினார். தம்பதியினர் வீடு திரும்பினர். அவருக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, அவருடைய கணவர் மூன்றாவது முறையாக அவரை ஒரு கை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அதிகாலை 3 மணிக்கு வழியிலேயே அவருக்கு பிரசவம் நடந்தது. பின்னர், சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து, சுகாதார அதிகாரிகள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என்று குவாலா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றார்.