மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளைஞரை பகிரங்கமாக தாக்கி, ஷூ லேஸைக் கட்டிவிட ஒருவர் வற்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து, அவர் மீது கடுமையான சட்டமாக கருதப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: பவர்குவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ரித்தேஷ் ராஜ்புத். இவருக்கு வயது 28. சாலையில் சரியாக வாகனம் ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பழங்குடியினரை கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தாக்கி சித்திரவதை செய்தார்.


இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) ரிஷிகேஷ் மீனா கூறுகையில், "காவல்துறையின் பரிந்துரையின் பேரில், மாவட்ட நிர்வாகம் ராஜ்புத் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வாரண்ட் நிறைவேற்றப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள்  சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.


இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளி ரோஹித் ரத்தோர் என அடையாளம் காணப்பட்டுள்லார். அவரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறோம்" என்றார்.


பழங்குடிக்கு நேர்ந்த கொடூரம்: பழங்குடியின இளைஞரை பொது இடத்தில் வைத்து அடித்து, ஷூ லேஸ் கட்டிவிட வற்புறுத்திய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.


ராஜ்புத் மீது ஏற்கனவே 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்,  ராஜ்புத் மீது மூன்று ஆண்டுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர் அதை மீறி குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். தடை உத்தரவை மீறியதாக அவர் மீது தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


சமீப காலமாக, தலித்கள், பழங்குடிகள், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக கடும் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.