Modi Emmanuel Macron: ''My Dear Friend''.. மாறி மாறி ட்வீட் போட்ட மேக்ரான், மோடி; இருவரும் இன்று முக்கிய பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இடையே இன்று முக்கிய சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இருவரும் அது குறித்து பதிவிட்டுள்ளனர். என்ன கூறியுள்ளனர் தெரியுமா.?

பிரான் அதிபர் இமானுவேல் மேக்ரான் 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை வந்துள்ள அவர், செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதோடு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்நிலையில், தங்களது சந்திப்பு குறித்து இருவருமே தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
மோடி - மேக்ரான் சந்திப்பு; கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, தற்போது பிரான் அதிபர் இமானுவேல் மேக்ரான் 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை வந்துள்ள அவரை சந்திக்க, பிரதமர் மோடியும் இன்று மும்பை செல்கிறார்.
தொடர்ந்து, பிற்பகலில் மும்பை ஆளுநர் மாளிகையில், இரு தலைவர்களும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நட்ததுகின்றனர். பின்னர், மாலையில் அங்குள்ள தர்பார் அரங்கில், இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
பிரான்ஸிலிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க சமீபத்தில் இந்திய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், இரு தலைவர்களின் சந்திப்பின் போது, ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் மற்றும் அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பரிமாற்றங்கள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர், மும்பை தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் இந்தியா-பிரான்ஸ் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்றும் மேக்ரான் மற்றும் மோடி, இரவில் மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெறும் இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க மற்றும் கலாச்சார விழாவில் பங்கேற்கின்றனர்.
அதன் பின்னர், நாளை டெல்லி செல்கிறார் மேக்ரான். அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து, அங்கு நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இந்திய பயணம் குறித்து பதிவிட்ட மேக்ரான்
தனது இந்திய பயணம் குறித்து பதிவிட்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், மூலோபாய கூட்டாண்மையை மேலும் முன்னேற்ற, மும்பையிலிருந்து புது தில்லி வரை 3 நாட்கள் பயணம் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகளுக்கு உண்மையான, உறுதியான உயிர் கொடுக்கும் பொருளாதார, தொழில்துறை, கலாச்சார மற்றும் டிஜிட்டல் துறை ஒப்பந்தங்களை மேற்கொள்ள, தன்னுடன் பல்துறை தலைவர்கள் பயணிப்பதாகவும், ஒன்றாக, நாம் நமது ஒத்துழைப்பில் இன்னும் முன்னேறுவோம். நாளை சந்திப்போம், என் அன்பு நண்பரே. நரேந்திர மோடி! என்று பதிவிட்டார்.
En route to India!
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 16, 2026
Three days from Mumbai to New Delhi to take our strategic partnership even further.
On board with me: business leaders and the economic, industrial, cultural and digital players who give real, tangible life to the ties between India and France.… pic.twitter.com/k3Q9fSckWs
பதில் பதிவிட்ட பிரதமர் மோடி
மேக்ரானின் இந்த பதிவிற்கு பதிலளித்த பிரதமர் மோடி, மேக்ரானை இந்தியாவிற்கு வரவேற்பதாகவும், அவரது வருகை இருதரப்பு உறவுகளை புதிய உயரத்திற்கு முன்னேற்றும் என்று எதிர்நோக்குவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், “நமது விவாதங்கள் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன். மும்பையிலும் பின்னர் டெல்லியிலும் சந்திப்போம், என் அன்பு நண்பரே இமானுவேல் மேக்ரான்“ என்று பதிவிட்டுள்ளார்.
Welcome to India!
— Narendra Modi (@narendramodi) February 17, 2026
India looks forward to your visit and to advancing our bilateral ties to new heights. I am confident that our discussions will further strengthen cooperation across sectors and contribute to global progress.
See you in Mumbai and later in Delhi, my dear friend… https://t.co/5gDTDt6llp
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 4-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.























