தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தனது தந்தையுமான சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தரம் தாழ்ந்த அரசியல் என்று சுப்ரியா சூலே கருத்து தெரிவித்துள்ளார்.
சரத்பவாருக்கு கொலை மிரட்டல்:
அந்தக் கொலை மிரட்டலில் `விரைவில் தாபோல்கருக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும்' என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமூக ஆர்வலர் தாபோல்கர் புனேவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக சுப்ரியா சூலே கூறுகையில், எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு இன்று என் தந்தையை கொலை செய்துவிடப் போவதாக மிரட்டல் குறுந்தகவல் ஒன்று வந்தது. இது மிகவும் தரம் தாழ்ந்த அரசியல். இதுபோன்ற அரசியலை செய்வோர்கள் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இதனையடுத்து சுப்ரியா சூலே தலைமையிலான என்சிபி கட்சியினர் மும்பை காவல்துறை தலைவர் விவேக் பன்சால்கரை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரியா சூலே, "எனது வாட்ஸ் அப்பிற்கு பவார் சாஹேப் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகக் கூறி மிரட்டல் வந்தது. இது தொடர்பாக நான் மாநில உள்துறை அமைச்சருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறேன். அதன்படி தரம் தாழ்ந்த அரசியல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
தண்டிக்க வேண்டும்:
அவர் மேலும் பேசும்போது, "காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகமும் சீக்கிரம் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் என்பது வேறு அச்சுறுத்தல் என்பது வேறு. ஒரு இணையதளம் வாயிலாகவும் மிரட்டல் வந்துள்ளது. ட்விட்டர் முழுவதும் மிரட்டல் உள்ளது. இதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டித்து நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றார்.
அதேபோல் உள்துறை அமைச்சகத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக அவர் கூறினார். சோலாபூரில் ஒரு காபி குடித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் உற்று நோக்கு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சரத்பவார் சாஹேபுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக நேர்மையான நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரியா சுலே வலியுறுத்தினார்.
தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், "நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்தம் கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது. அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி உரிமை உண்டுதான். ஆனால் இதுபோன்று அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் ஒருவர் பேசுவதை நிறுத்தி விடலாம் என சிலர் கருதுகிறார்கள். அது தவறான எண்ணம். காவல் துறை மீதும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்தக் கொலை மிரட்டல் குறித்து நான் அச்சப்படவில்லை" என்று தெரிவித்தார்.