மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மக்களவையில் அதிகாரமிக்க பதவியான சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா தொடர்ந்து 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். 


ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் கை குலுக்கி கொண்டனர். அதனை தொடர்ந்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை இருவரும் அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். 


ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த சபைக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஐந்தாண்டுகளில் நீங்கள் எங்களை வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக பதவியேற்றது ஒரு சாதனை. மக்களவை சபாநாயகராக பல்ராம் ஜாக்கர் இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே இருந்துள்ளார். பெரும்பாலான தலைவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை அல்லது சபாநாயகரான பிறகு வெற்றி பெறவில்லை, ஆனால் நீங்கள் (ஓம் பிர்லா) தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்கள்.” என தெரிவித்தார். 






மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய ராகுல் காந்தி, ”ஆளும் மத்திய அரசிடம் அதிக எண்ணிக்கையிலான எம்பிக்கள் உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியில் இந்திய மக்களின் குரலாக மட்டுமே இருக்கிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் குரலையும் அவையில் எழுப்புவது மிகவும் முக்கியம்” என்று கூறினார். 


இரண்டாவது முறையாக சபாநாயகரானார் ஓம் பிர்லா: 


தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்பிக்களின் எண்ணிக்கையை பார்த்தால், ஓம் பிர்லா ஏற்கனவே மீண்டும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்பப்பட்டது. அதேபோல், தற்போது மீண்டும் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


இரண்டாவது முறையாக சபாநாயகராக பதவியேற்றதால், தொடர்ந்து 2வது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது நபர் என்ற பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார். ஓம் பிர்லாவுக்கு முன், பல்ராம் ஜாக்கர் மொத்தம் 9 ஆண்டுகள் சபாநாயகராக இருந்துள்ளார். பல்ராம் ஜாக்கர் முன், 1970 முதல் 1975 வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் மக்களவை சபாநாயகராக இருந்தவர் குர்தியால் சிங் தில்லான்.


முன்னதாக, நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் சுமித்ரா மகாஜன் சபாநாயகராக இருந்தார். இதன் பிறகு 2019ல் ஓம் பிர்லாவுக்கு சபாநாயகராக இருக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓம் பிர்லா சபாநாயகராக அடுத்த 5 ஆண்டுகள் நீடித்தால் அதுவும் சாதனையாக இருக்கும். இதுவரை 10 ஆண்டுகளாக எந்த சபாநாயகரும் பதவி வகிக்கவில்லை.