லாலு பிரசாத் யதவிற்கு உடல்நலக்குறைவு:


ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் நீண்ட காலமாக உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தி இருந்தனர்.  இதன் காரணமாக மேல் சிகிச்சைக்காக,  கடந்த மாதம் லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் சென்றார். ஆனால் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், இந்தியாவுக்கு வெளியே தங்குவதற்கு சிபிஐ நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக அக்டோபர் 23 ஆம் தேதியே லாலு பிரசாத் யாதவ் டெல்லி திரும்பினார்.


தந்தைக்கு உதவ முன்வந்த மகள்:


இதனிடையே, லாலுவிற்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க, அவரது இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சைக்காக மீண்டும் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற லாலு பிரசாத் யாதவ் கோரிக்கையை சிபிஐ நீதிமன்றம் ஏற்றது. அதைதொடர்ந்து, கடந்த மாதம் 27ம் தேதி அவர் சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டார்.






தந்தைக்காக சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மகள்:


இந்நிலையில், இன்று (டிச.05) அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக, லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி  தனது டிவிட்டர் பக்கத்தில்  புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், தனது தந்தைக்கு சிறுநீரகம் வழங்குவதற்காக மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள அவர், தன்னை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.






அறுவை சிகிச்சை நிறைவு:


அதைதொடர்ந்து, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  தேஜஸ்வி வெளியிட்டுள்ள வீடியோவில், அறுவை சிகிச்சை அறையில் இருந்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகு லாலு பிரசாத் யாதவ் வேறு அறைக்கு மாற்றப்படுகிறார். அதோடு, வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அப்பா ICU பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டுள்ளார்.


லாலு பிரசாத் யாதவின் எழுச்சி:


 1990ம் ஆண்டு பீகாரின் முதலமைச்சராக பொறுப்பேற்ற லாலு பிரசாத் யாதவ், 1995ம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் முதலமைச்சராக தேர்வானார்.  ஆனால், போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன கொள்முதலில் ஊழல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால், அவர் முதலமைச்சர் பதவியை இழக்க நேரிட்ட போது, மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்து ஆட்சி செய்தார். 1997, 1999 மற்றும் 2000 என மூன்று முறை, ராப்ரி தேவி பீகாரின் முதலமைச்சர் பதவி வகித்தார்.


மத்திய அரசில் லாலு பிரசாத்:


இதனிடையே, தேசிய அரசியலில் கவனம் செலுத்திய லாலு பிரசாத் யாதவ், 2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தார். தொடர்ந்து, மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில், லாலு பிரசாத் யாதவிற்கு ரயில்வே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து  நஷ்டத்திலேயே இயங்கி வந்த ரயில்வே துறையை, இந்திய வரலாற்றில் முதல்முறையாக லாபத்தில் இயக்கிய ரயில்வே அமைச்சர் என்ற பெருமை லாலு பிரசாத் யாதவையே சேரும்.


லாலு பிரசாத்தின் வீழ்ச்சி:


இதனிடையே, பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கால்நடை தீவனம் கொள்முதல் ஊழல் தொடர்பான வழக்கில்,  லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என 2013ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனால் அவர் தனது எம்.பி பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டார். இதோடு பல்வேறு உடல்நலக்கோளாறும் ஏற்பட, தீவிர அரசியல் இருந்து லாலு பிரசாத் யாதவ் ஒதுங்கியிருக்கிறார்.  2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரிய இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.


தவிர்க்க முடியா லாலு பிரசாத் யாதவ்:


அதேநேரம், இன்றளவும் பீகார் அரசியல் லாலு பிரசாத் தவிர்க்க முடியாதவராகவே உள்ளார். அவரது தலைமையிலான ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தே, நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சர் பதவியை வகித்து வருகிறார். லாலு பிரசாத்தின் இடத்தை அவரது மகன் தேஜஸ்வி நிரப்ப, பீகாரின் துணை முதலமைச்சராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். 


 


 


 


 


 


 


 


முன்னதாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில்,  74 வயது லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக முன்னதாக சிங்கப்பூர் சென்றார். இன்று அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலையில் சிங்கப்பூரில் வசித்து வரும் லாலுவின் மகள் அவருக்கு சிறுநீரகம் அளிக்க உள்ளார்.


இந்நிலையில், லாலு பிரசாத் விரைந்து குணமடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ”முதுபெரும் சமூக நீதிப் போராளியும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு இன்று மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமையவும், விரைந்து குணமடையவும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.


முன்னாள் ரயில்வே துறை அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன வழக்கில் சிக்கி சிறை சென்ற நிலையில், சிகிச்சைக்காக டெல்லி, ராஞ்சி மருத்துவமனைகளில் பலமுறை அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தொடர்ந்து பிணையில் லாலு பிரசாத் யாதவ் வெளிவந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கான அவரது மனுவை டெல்லி நீதிமன்றம் அனுமதித்தது. சிறப்பு நீதிபதி (சிபிஐ) கீதாஞ்சலி கோயல் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை, வெளிநாடு செல்ல லாலுவுக்கு அனுமதி வழங்கினார். தனது பாஸ்போர்ட்டை விடுவிக்கக் கோரிய லாலுவின் மனுவை ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 16ஆம் தேதி ஏற்றுக்கொண்டது.