விவசாயிகளை கொன்றவர்களை பதவியில் இருந்து நீக்கு என்ற அட்டைகளை ஏந்தி மக்களைவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். 


நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 


நேற்று அவை தொடங்கியதும், லக்கிம்பூர் வன்முறை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், காலை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து, பிற்பகல் கூட்டம் தொடங்கியபோது அவைத் தலைவரின் இருக்கையின் முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “லக்கிம்பூர் கெர்ரியில் நடந்த கொலையைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும், அங்கு அமைச்சரின் தலையீடு இருந்தது. இது ஒரு சதி என்று கூறப்படுகிறது. விவசாயிகளை கொன்ற அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தண்டிக்க வேண்டும். அஜய் மிஸ்ரா ஒரு குற்றவாளி” என பேசினார். அவரைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி அட்டைகளை ஏந்தி முழக்கமிட்டனர். 




எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே, உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி எனவும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 






முன்னதாக, உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில், விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், 'இந்த சம்பவம் கவனக்குறைவால் நடக்கவில்லை. கொலை செய்யும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனிடையே நேற்று மகனைப் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளரை அமைச்சர் அஜய் மிஸ்ரா தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றனர்.