கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.
லடாக் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதா?
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு கடந்தாண்டு வெளியானது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என தெரிவித்தது. ஆனால், ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும், யூனியன் பிரதேசமாக லடாக் மாற்றப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், லடாக்கிற்கும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டம் வெடித்துள்ளது. மாநில அந்தஸ்துக்கான போராட்டத்தை லே உச்சபட்ச அமைப்பு (LAB) மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி (KDA) முன்னெடுத்து வருகிறது. லடாக்கிற்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்ப்பது, உள்ளூர் மக்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு வழங்குவது, லே மற்றும் கார்கில் மாவட்டங்களை நாடாளுமன்ற தொகுதிகளாக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றுமா மத்திய அரசு?
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நேற்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. லடாக்கில் உள்ள லே மற்றும் கார்கில் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று போராட்டம் நடத்தினர். வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
தொலைதூர பகுதியான ஜான்ஸ்கர் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கு பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலான பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படவில்லை. கடும் பனியையும் பொருட்படுத்தாமல், பாலினம், வயது வித்தியாசம் தாண்டி அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி லடாக்கின் முக்கிய தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய மகசேசே விருது பெற்ற சோனம் வாங்சுக், "பாஜக தலைமையிலான மத்திய அரசின் மத்திய அமைச்சர்கள் லடாக்கை ஆறாவது அட்டவணையில் சேர்க்க உறுதியளித்தனர்.
லடாக்கை பாதுகாக்க அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள கோரியும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டியும்
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும், 2020 லே ஹில் கவுன்சில் தேர்தலின்போதும், பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு, மத்திய அரசு அமைதி காத்து வருகிறது. ஆறாவது அட்டவணையைப் பற்றி பேசுபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இப்போது சுரங்கத் தொழிலில் லடாக்கை அழிக்க விரும்பும் லாபிகள் உள்ளன. நாங்கள் எங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மட்டுமே கோருகிறோம். அது நடக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என்றார்.