'எல்லோருக்கும் நல்லதே நடக்கும்' விஜய் அரசியல்.. பக்தி பரவசத்தில் பவன் கல்யாண் பளீச்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சென்ற ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், விஜய் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கும்பகோணத்தில் பேட்டி அளித்துள்ளார்.
பவன் கல்யாண் என்ன சொன்னார்?
Just In




கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண். அதன்படி, இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, சுவாமிநாத சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, கோவில் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
கும்பகோணம் தனியார் கல்லூரியில் பயிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பவன் கல்யாணை காண கோவிலில் குவிந்தனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த நான்கரை ஆண்டுகளாக நான் அறுபடை வீடுகள் கோவிலுக்கு வரவேண்டும் என நினைத்திருந்தேன்.
தவெக விஜய் குறித்து பரபரப்பு கருத்து:
அதேபோல், கும்பமுனி சித்தரை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன். இப்போதுதான், இந்த கோவிலுக்கு வருவதற்கான பாக்கியத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். எனவே, சாமி தரிசனம் செய்வதற்காக இப்போது வந்துள்ளேன். சனாதன தர்ம யாத்திரா மேற்கொள்வதாக இருந்தால் சொல்லிவிட்டு தான் வருவேன்" என்றார்.
அரசியல் குறித்து கேட்டதற்கு கோவிலுக்கு வெளியே தான் பேச வேண்டும் என பதில் அளித்தார். விஜய் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "எல்லோருக்கும் நல்லதே நடக்கும்" என தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாட்டில், திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளது, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், அவருடன் கூட்டணி அமைக்க பாஜக மற்றும் அதிமுக முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக, அதிமுக, பாஜக, தவெக என மெகா கூட்டணி அமைக்க முயற்சி நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால், பாஜக தனக்கு எதிரி என்று விஜய் அறிவித்து விட்டதால், இத்தகைய கூட்டணி அமையுமா என்பதும் கேள்விக்குறிதான்.
ஆந்திராவில் பலம் வாய்ந்த ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்த சந்திரபாபு நாயுடு, பாஜகவுடன் கூட்டணி அமைத்தவர் பவன் கல்யாண். இம்மாதிரியான நிலையில், விஜய் அரசியல் வருகை குறித்து பவன் கல்யாண் தெரிவித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.