மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ளது ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரி. இங்கு கடந்த 9ம் தேதி 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


பெண் மருத்துவர் கொலை:


பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் மருத்துவர்கள் பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அதில் பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அப்போது, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைக்க தடியடி நடத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


அப்போது, மர்மநபர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரத்தில் 15 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 9 பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு சடலம் இருந்த இடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஆதாரங்கள் அழிப்பா?


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சுவ்ராங்கர் தத்தா, 1000க்கும் மேற்பட்டோர் கும்பல் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரியை தாக்கி, ஆதாரங்களை சிதைத்து நீதியைத் தடுக்க முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.






இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கொல்கத்தா போலீசார், குற்றம் நடைபெற்ற கருத்தரங்கு அரங்கை யாரும் தொடவில்லை. உறுதி செய்யப்படாத செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். வதந்தியை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.


மேலும், கடந்த வாரம் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட கருத்தரங்கு அரங்கு அருகே புனரமைப்பு பணிகள் நடைபெற்றபோது ஆதாரங்களை அழிக்க முயற்சித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மம்தா பானர்ஜி அரசு ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக அந்த மாநில பா.ஜ.க. குற்றம் சாட்டியது. இதையடுத்து, தற்போது அங்கு வன்முறை நடைபெற்றது.


பெண் மருத்துவரின் கொலை விவகாரத்தில் பலரும் ஈடுபட்டிருக்கலாம் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்திருக்கும் சூழலில், அடுத்தடுத்து கொல்கத்தாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.