இந்திய சுதந்திரப் போராட்டம் என்றதும் நம் எல்லோருக்கும் மகாத்மா காந்தி, நேதாஜி, பகத் சிங் போன்றோரின் பெயர்கள்தான் உடனே நினைவுக்கு வரும். ஆனால், தனது 18ஆவது வயதிலேயே தாய்நாட்டிற்காகச் சிரித்துக்கொண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்ட இளம் புரட்சியாளர் குதிராம் போஸின் தியாகம் பலருக்கும் தெரிவதில்லை.
இளம் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், 23 வயதில் உயிரிழந்த கதையை அறிந்திருப்போம். 18 வயதுச் சிறுவன் குதிராஸ் கதையை தெரிந்திருக்கிறோமா?
யார் இந்த குதிராஸ்?
1889ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் பிறந்தவர் குதிராம் போஸ். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த இவரை, மூத்த சகோதரிதான் வளர்த்தார். அக்கால நம்பிக்கையின்படி, தம்பியின் ஆயுளைக் காக்க சில கைப்பிடி தவிட்டை (வங்காள மொழியில் Khud) கொடுத்து அவரை அடையாளப்பூர்வமாக வாங்கினார் சகோதரி. அதனாலேயே அவருக்கு குதிராம் என்ற பெயர் வந்தது.
உதிரத்தில் சுதந்திரத் தீ
அரவிந்தர், நிவேதிதா தேவி ஆகியோரின் முழக்கங்களால் ஈர்க்கப்பட்ட இவர், தனது ஒன்பதாம் வகுப்பிலேயே படிப்பைக் கைவிட்டு 'அனுசீலன் சமிதி' என்ற ரகசியப் புரட்சி அமைப்பில் இணைந்தார். 1905-ல் நடந்த வங்கப்பிரிவினை குதிராம் போஸின் ரத்தத்தில் சுதந்திரத் தீயை மூட்டியது.
அக்காலகட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கடுமையாகத் தண்டித்து வந்த கொடூரமான ஆங்கிலேய மாஜிஸ்திரேட் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல புரட்சியாளர்கள் திட்டமிட்டனர். இந்தப் பொறுப்பு குதிராம் போஸ் மற்றும் பிரபுல்லா சாகி ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.
குதிரை வண்டியின் மீது வெடிகுண்டு
1908-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி, பீகாரின் முசாபர்பூரில் கிங்ஸ்ஃபோர்டு வருவதாக நினைத்து ஒரு குதிரை வண்டியின் மீது குதிராம் போஸ் வெடிகுண்டு வீசினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வண்டியில் நீதிபதி இல்லை; மாறாக இரண்டு ஆங்கிலேயப் பெண்கள் உயிரிழந்தனர்.
தப்பியோடிய இருவரில், போலீசாரிடம் சிக்காமல் இருக்க பிரபுல்லா சாகி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். வைனி ரயில் நிலையத்தில் குதிராம் போஸ் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில்தான் செய்ததை தைரியமாக ஒப்புக்கொண்ட அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
18 வயதில் வீர மரணம்
1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி, பகவத் கீதையைக் கையில் ஏந்தியபடி, முகத்தில் புன்னகையுடனும், 'வந்தே மாதரம்' முழக்கத்துடனும் எந்தவித பயமும் இன்றி தூக்கு மேடை ஏறினார் குதிராம் போஸ். அப்போது அவருக்கு வயது 18 ஆண்டுகள், 8 மாதங்கள் மட்டுமே!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், விடுதலைக்காகத் தூக்கிலிடப்பட்ட மிக இளம் வயது தியாகிகளில் ஒருவராக குதிராம் போஸின் பெயர் வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது.
