அடுத்த 24 மணிநேரத்திற்குள் ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று கெடு விதித்திருந்தார். 


கேரள ஆளுநர், மாநில அரசுக்கு இடையேயான அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசு தானாகவே நியமித்தது. ஆனால், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தன்னுடைய பொறுப்பு என ஆளுநர் தெரிவித்திருந்தார். துணை வேந்தர்களில் இருவர் ஏற்கனவே தங்கள் பதவியில் இருந்து விலக உள்ளனர். கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் வி.பி. மகாதேவன் பிள்ளை அக்டோபர் 24 அன்று ஓய்வு பெறுகிறார்.


மேலும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.எஸ். ராஜஸ்ரீயின் நியமனம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுப் பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம், ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், காலிகட் பல்கலைக்கழகம் மற்றும் துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களுக்குதான் ஆளுநர் கெடு விதித்துள்ளார்.


இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கண்ணூர், மலையாளம் மற்றும் மீன்வளம் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் நியமனங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பதுதான்.


தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.எஸ்.ராஜஸ்ரீ நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றத்தின் அக்டோபர் 21ஆம் தேதி அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சரியாக அமைக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறி இருந்தது.


மேலும், சட்டத்தின்படி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். அதிலிருந்து, ஒருவரை வேந்தரான ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் கூறியிருந்தார்.


இச்சூழலில், துணை வேந்தர்களை ராஜினாமா செய்யக் கோரி ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, இன்றைய சிறப்பு அமர்வின்போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.


இந்நிலையில், ஆளுநரின் செயலை கடுமையாக விமர்சித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை அழிக்கும் நோக்கத்துடன் போர் தொடுத்துள்ளார். சங்பரிவாரின் ஆயுதமாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்கள் மற்றும் கல்வி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களின் மீதான அத்துமீறலாகும்" என்றார்.