கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை களைய கட்டாயப்படுத்திய நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ததாக கொல்லம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 


மருத்துவ படிப்பிக்கான தகுதி தேர்வான நீட் எக்ஸாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி செண்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் 'பிரா'-க்களை அவிழ்த்துவிட்டு எக்ஸாம் ஹாலுக்கு அனுமதித்துள்ளனர். இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கொல்லம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் கொல்லம் ரூரல் எஸ்.பி-க்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் கூறுகையில், "தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்தின் கேட்டை கடந்தபோது ஒரு பெண் அதிகாரி மாணவியை அழைத்து ஸ்கேனர் உபயோகித்து பரிசோதனை நடத்தினார். பிராவில் மெட்டல் ஹூக் இருந்ததால் பீப் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளாடையை கழட்டி வெளியே வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ள கொள்ள முடியாமல் மாணவி கதறி அழுதுள்ளார். இதனால் அந்த அதிகாரி மாணவியை மிகவும் மோசமாக வார்த்தைகளை பிரயோகித்து பேசியுள்ளார். தேர்வு முக்கியமா உன்னுடைய உள்ளாடை முக்கியமா என கேட்டுள்ளார். தேர்வு எழுதிய பிறகு உள்ளாடை இல்லாமல் வெளியே போக முடியாமல் ஒரு ஓரமாக நின்று அழுவதைக் கண்ட மற்றொரு அதிகாரி அருகில் சென்று விஷயங்களை கேட்டுள்ளார். நிலைமையை புரிந்துகொண்ட அவர் அந்த மாணவியின் அம்மாவின் போன் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து அம்மாவின் துப்பட்டாவை கொண்டுவரும்படி சொன்னார்.


 


பின்னர் காரில் போகும்போது  தேர்வு எப்படி எழுதினாய் என கேட்டபோது வெடித்து அழுத மாணவி நடந்த சம்பவத்தை கூறினாள். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகள் உலோகம் போன்ற பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை காரணம் காட்டி மாணவியின் உள்ளாடையை அவிழ்த்துள்ளனர். இதனால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், தெரிந்த கேள்விகளுக்கு கூட விடை எழுத முடியாமல் திரும்பி வந்ததாகவும் மாணவி கூறினார். வேறு மாணவிகளுக்கும் இதுபோன்று நடந்ததாக மாணவி கூறினார்" என பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.



நீட் தேர்வில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து மாணவிகளின் உறவினர்கள் பலரும் முகநூலில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுபற்றி மீடியாக்களிடம் பேசிய மாணவி ஒருவர், "நான் இதற்கு முன்பும் தேர்வு எழுதியதால் மெட்டல் ஆடைகள் அணியக்கூடாது என்பது தெரியும். அதனால் பிளாஸ்டிக் ஹூக் உள்ள பிரா அணிந்து சென்றேன். ஆனாலும் அவர்கள் பீப் சத்தம் கேட்டதாக சொல்லி பிராவை கழற்றச்சொன்னார்கள். அவர்கள் சொன்ன அறையில் பத்து பதினைந்து மாணவிகளை ஒன்றாக நின்றுகொண்டு பிராவை கழற்றும் நிலைமை. ஒரு கவரில் தனியாக உள்ளாடையை வைப்பதற்கு எங்களை அனுமதிக்கவில்லை. அங்கு ஓரிடத்தில் போடச்சொன்னார்கள். ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்ததால் தேர்வு எழுத முடியாதோ என்ற பயத்தின் காரணமாக அவர்கள் சொன்னதை செய்தோம். புதிதாக வந்த மாணவி ஒருவர் இதை எப்படி அவிழ்ப்பது என தயங்கியபோது, 'உங்கள் கேரியர் பெரிதா உள்ளாடை பெரிதா' என கேட்டார்கள். நாங்கள் சுய மரியாதையை இழந்து தேர்வு எழுதினோம்.



உள்ளாடையை கழற்றிய பிறகு தரைத்தளத்தில் இருந்து இரண்டாவது மாடியில் உள்ள தேர்வு எழுதும் அறைக்கு நாங்கள் செல்லும்போது வழிகாட்ட ஆண் வாலண்டியர்ஸ் நின்றனர். அவர்களை எல்லாம் தாண்டி தேர்வு எழுதும் அறைக்குச் சென்றேன். அது ஆண்களும் பெண்களும் சேர்ந்து தெந்ர்வு எழுதும் அறை. உள்ளாடை இல்லாமல இந்த ஹாலில் எப்படி இருப்பது என கேட்டதற்கு, அனைத்து மாணவிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என சொன்னர்கள். என் இருக்கையை சுற்றி மாணவர்கள் இருந்தார்கள். அடிக்கடி ஒரு சார் அங்கு பரிசோதனைக்காக வந்தார். அவர்கள் முன்பு எப்படி தேர்வு எழுத முடியும். நாங்கள் அங்கிருந்து அழுதோம். வெள்ளை நிற ஆடை அணிந்து வந்த மாணவிகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. கீழே விழுந்த பேனாவை எடுக்கவோ, குனிந்து தேர்வு எழுதவோமுடியாத அவஸ்தை. தேர்வு முடியும் வரை மார்பில் கைவைத்துக்கொண்டே இருந்தேன். எப்படியாவது வெளியே வந்தால் போதும் என்று இருந்தது. வெளியே வந்து அந்த இருட்டான அறையில் சென்று பார்த்தபோது அந்த ரூம் முழுவதும் மாணவிகளின் உள்ளாடையாக குவிந்து இருந்தது. காரில் போகிறவர்கள் அப்படியே வெளியே செல்லுங்கள் என்றனர். மாணவிகள் அழுதுகொண்டே சென்றனர்" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண