பரோட்டா என்பது பலருக்கு மிகவும் பிடித்தமான உணவு. அதிலும் குறிப்பாக பரோட்டா பீஎஃப் கரி என்றால் அதை பார்ப்பதற்கு முன்பாக கேட்டாலே வாயில் எச்சி ஊரும். அத்தகைய சிறப்பு இந்த காம்போவிற்கு உண்டு. கேரளாவின் உணவு அடையாளங்களில் ஒன்றாக இந்த இரண்டையும் கூட சொல்லலாம். கேரளாவில் பல சாலை ஓர கடைகளில் இந்த உணவு மிகவும் எளிமையாக கிடைக்கும். இந்தக் கடைகளில் பெரும்பாலும் பரோட்டா மாஸ்டர்களாக ஆண்கள்தான் இருப்பார்கள். அவர்கள் பரோட்டா மாவை பிசைந்து தட்டு சுற்றி பரோட்டா போடுவதே ஒரு அழகாக இருக்கும். அதைப் பார்க்கும் போதே நமக்கு பரோட்டா சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். 


அந்தவகையில் ஒரு கடையில் நீண்ட நாட்களாக ஒரு இளம் பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்? யார் அவர்? எப்படி இந்த பரோட்டா போடும் பணிக்குள் வந்தார்?


கேரளா மாநிலம் கோட்டையத்திலுள்ள குருவன்மூழி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அனஸ்வரா ஹரி(23). இவரது குடும்பம் சபரிமலை செல்லும் வழியில் அமைந்துள்ள வனப்பகுதியில் ஒரு ஓட்டலை நடத்தி வருகிறது. இந்த ஓட்டல் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இதில் அனஸ்வராவின் தாத்தா பாட்டி டீ வியாபாரம் செய்து வந்தனர். அதை தற்போது இவரின் தாய் நடத்தி வருகிறார். இவருக்கு சிறு வயதாக இருக்கும் போதே இவருடைய தந்தை குடும்பத்தை விட்டு சென்றுள்ளார். 




இதன் காரணமாக குடும்ப பொறுப்பை இவருடைய தாய் ஏற்றுள்ளார். அவர் தினமும் இந்த ஓட்டலில் டீ போட்டும் உணவுகள் தயாரித்தும் வழங்கி வந்துள்ளார். இந்தச் சூழலில் தனக்கு 13 வயதாக இருக்கும் போது அனஸ்வரா இந்த ஓட்டலில் தாமும் பணிபுரிந்து தாய்க்கு உதவவேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்காக பரோட்டா போடுவது எப்படி என்று கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார். முதல் முறையே அடுப்பில் சுட்ட பரோட்டாவை எடுத்து தட்டும் போது சிறிய தீ காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் இளங்கன்று பயம் அறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப அவரது வலியை விட குடும்பத்தின் வறுமை தான் அவருடைய கண்ணுக்கு அதிகமாக தெரிந்துள்ளது.


எனவே அதை பொருட்படுத்தாது தொடர்ந்து முயற்சி செய்து சில நாட்களுக்குள் பரோட்டா மாவு தயாரிப்பது தொடங்கி இறுதியாக சுட்ட பரோட்டாவை எடுத்து தட்டுவது வரை சிறப்பாக செய்ய தொடங்கினார். இந்த வேலைகள் செய்தபோதும் அவர் தனது படிப்பை விட்டுவில்லை. பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களை இந்த ஓட்டலில் செலவிட்டுள்ளார். குறிப்பாக இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரத்தை படிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார். இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பரோட்டா போடும் தொழில் ஈடுபட்டு வருகிறார். ”எனக்கு பொரோட்டான்னு செல்லப் பெயரே கிடைத்துவிட்டது. தினமும் காலையில் 150 பரோட்டாக்கள் போட்டுவிடுவேன்” என்கிறார் அனஸ்வரா.




அந்தவகையில் தற்போது 23 வயதாகும் அனஸ்வரா ஹரி பள்ளிப்படிப்பை முடித்து தொடுப்புழாவிலுள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை பயின்று வருகிறார். ஒரு புறம் பரோட்டா போடுவது மற்றொரு புறம் படிப்பது என்று இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இளங்கலை பட்டப்படிப்பு முடிந்தவுடன் ஐஏஸ்,ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வையும் இவர் எழுத திட்டமிட்டுள்ளார். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அனஸ்வரா ஹரி போன்றவர்கள் வாழும் சான்றுகளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: கும்ப மேளாவில் கோவிட் பரிசோதனைகள் போலியானவை : சுகாதாரத்துறை தகவல்..!