ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் படம் சமீபத்தில் சருமப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கேரள மருத்துவமனையின் விளம்பரப் பதாகையில் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரத்தில் தற்போது மருத்துவமனைத் தரப்பில் இருந்து மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. கேரளாவின் வடக்கரா கூட்டுறவு மருத்துவமனை வெளியிட்டிருந்த விளம்பரப் பதாகையில் மரு, தோல் குறிகள், மிலியா, மொல்லஸ்கம் முதலான சருமப் பிரச்னைகளைத் தீர்க்க சிகிச்சை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் அந்த விளம்பரப் பதாகையில், ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன், `உங்கள் தோல் குறிகள், மருக்கள், மிலியா, மொல்லஸ்கம் முதலான சருமப் பிரச்னைகளைச் சாதாரண வழிமுறைகளில் ஒரே விசிட்டில் நீக்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. 


சருமப் பிரச்னை விளம்பரத்தில் ஹாலிவுட் நடிகர் படம்.. கொதித்த நெட்டிசன்கள்.. மன்னிப்பு கோரிய கேரள மருத்துவமனை!

சர்ச்சைக்குரிய பதாகை


 


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கரா கூட்டுறவு மருத்துவமனையின் விளம்பரப் பிரிவுத் தலைவர் சுனில், `எங்கள் மருத்துவமனையில் புதிதாக சமீபத்தில் சரும நிபுணர் மருத்துவர் ஒருவர் இணைந்துள்ளார். எங்கள் மருத்துவமனையில் வழங்கப்படும் தோல் சிகிச்சைகள், வசதிகள் ஆகியவற்றை விளம்பரம் செய்வதற்காக இந்தப் பதாகையை மருத்துவமனைக்கு வெளியில் கடந்த நான்கு நாள்களாக வைத்திருந்தோம். உள்ளூரில் உள்ள வடிவமைப்பாளர் ஒருவர் இதனை வடிவமைத்திருந்தார். இதுகுறித்த புரிதலோ, ஆழ்ந்த அறிவோ இல்லாத காரணத்தால், இந்த விளம்பரப் பதாகை மருத்துவமனையில் வாசலில் வைக்கப்பட்டது. இந்த விளம்பரத்தில் ஏன் நெல்சன் மண்டேலாவின் படத்தை வைத்திருக்கிறீர்கள் என ஒருவர் கேட்டார். எனவே நாங்கள் விளம்பரப் பதாகையைக் கடந்த ஜனவரி 29 அன்று நீக்கிவிட்டோம்’ என்று கூறியுள்ளார். மார்கன் ஃப்ரீமேன் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த `இன்விக்டஸ்’ திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



தொடர்ந்து பேசிய அவர், `எனினும், ஜனவரி 30 முதல் இந்த விளம்பரம் இணையத்தில் வைரலானது. நாங்கள் எங்கள் மன்னிப்பை பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளோம். மார்கன் ஃப்ரீமேன் மிகச் சிறந்த நடிகர் என்பதையும், உலகில் அவரை ரசிக்கும் பலரும் இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்கள் தரப்பில் அறிவுக் குறைப்பாட்டால் ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு மனதார மன்னிப்பு கோருகிறோம்’ எனக் கூறியுள்ளார். 


இந்த விவகாரத்தில் வடக்கரா கூட்டுறவு மருத்துவமனை இணையவாசிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.