கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சசீந்திரனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. வேலை முடிந்து வீட்டிற்க நடந்தே செல்லும் அவர், ரேஷன் பொருளை வாங்கிச் செல்லும் அந்த புகைப்படம், எளிமைக்கு உதாரணமாக விளங்குகிறது. அந்த புகைப்படத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-ன் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார், எம்எல்ஏ சசீந்திரன் யார் என்பது குறித்து பார்க்கலம்.

புகைப்படத்தை பகிர்ந்து ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளது என்ன.?

சிபிஎம் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், சிபிஎம் கல்ப்பெட்டா(வயநாடு) தொகுதி எம்எல்ஏ தோழர் சசீந்திரன் தான் இது என குறிப்பிட்டு, எளிமையான வாழ்க்கையோடு மக்களுக்கு தொண்டு செய்யும் எம்.எல்.ஏ-க்களை கம்யூனிஸ்ட் கட்சிகளில் தான் காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படத்தில், மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு அவர் ரேஷன் வாங்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

யார் இந்த சசீந்திரன்.?

கேரளாவின் கல்பெட்டாவிற்கு அருகே உள்ள அரிஞ்சர்மாலையைச் சேர்ந்தவர் சி.கே. சசீந்திரன். அரசியல்வாதியான இவர், சமூக சேவகரும் கூட. அதோடு, பால் பண்ணையாளர் மற்றும் விவசாயியும் ஆவார். இவர் தற்போது, கல்பெட்டா தொகுதியிலிந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்திய கம்யூனிஸ் கட்சி(மார்க்சிஸ்ட்) உறுப்பினரான சி.கே. சசீந்திரன், அக்கட்சியின் மாணவர் இயக்கங்கள் மூலம் அரசியலில் நுழைந்தார். 1981-ல் கட்சியின் முழு நேர உறுப்பினரானார். அதோடு, கல்பெட்டா மற்றும் மனந்தவாடிக்கான சிபிஐ(எம்)-ன் பகுதி செயலாளராகவும், மாவட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், ஆதிவாசி பூ சம்ரக்ஷண சமிதியின் ஒருங்கிணைப்பாளராகவும், கேரள மாநிலர கர்ஷக தொழிலாளி யூனியன் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 

வயநாட்டின் மக்கள் தொகையில் கணிசமான விகிதத்தில் காணப்படும் பழங்குடியின மக்களின் ஆதரவாளராக சசீந்திரன் அறியப்படுகிறார். நிலமற்ற பழங்குடியினருக்கான ஏராளமான போராட்டங்களில் அவர் பங்கெடுத்து, முன்னாள் நின்று அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

மக்கள் சேவைக்காக அறியப்பட்ட சசீந்திரன்

2019-ல் புத்துமலாவில் தொடர்ந்து பெய்த கனமழையால், வயநாடு மாவட்டத்தில் ஏராளமானோர் வீடுகளை இழந்தும், வெள்ளத்தில் சிக்கியும் தவித்தனர். அந்த நேரத்தில், கல்பெட்டா தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த சசீந்திரன், மழையையும் பொருட்படுத்தாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ததுடன், மீட்புப் பணியிலும் ஈடுபட்டார்.

அந்த காலகட்டத்தில், அவர் மீட்புப் பணியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. இப்படிப்பட்ட எம்எல்ஏ கிடைக்க அந்த மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற பாராட்டுகளையும் அவர் பெற்றார்.

இப்படி, தனது தொகுதி மக்களுக்காக உழைக்கும் அதே நேரத்தில், எந்தவித சொகுசு வாழ்க்கையும் நடத்தாமல், எளிமையான முறையில் அவர் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில்தான், தற்போது அவர் ரேஷன் வாங்கிச் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.