கேரள நடிகை பலாத்கார வழக்கு: நடிகர் திலீப் விடுவிப்பு! அதிர்ச்சி தீர்ப்பு, குற்றவாளிகள் யார்? பரபரப்பு தீர்ப்பு!
நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கத் தவறிவிட்டதாகச் சொல்லி கேரள நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
கேரளாவை அதிரவைத்த நடிகை பலாத்கார வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டு நடந்த இந்தக் கொடூரம் குறித்து எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், இன்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம் வர்கீஸ் தீர்ப்பளித்தார். இதில் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திலீப் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு அதிர வைக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 2017 பிப்ரவரி 17ம் தேதி கொச்சியில் இந்தக் கொடூரம் அரங்கேறியது. திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யவும் பல்சர் சுனில் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார்.
அன்றைய தினமே அந்த நடிகை காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்தது. வழக்கில் திடீர் திருப்பமாக பல்சர் சுனில் தானாகவே முன்வந்து சரணடைந்து முக்கியக் குற்றவாளியானார். செல்போன் பதிவுகள் அடிப்படையில் நடந்த விசாரணையில் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக 2017 ஜூலை 10ம் தேதி திலீப்பும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் 8வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். குற்றச் சதி, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டது.
ஐடி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் திலீப் தான் இந்த வன்கொடுமையைத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.. அவருக்கும் அந்த நடிகைக்கும் முன்கூட்டியே பகை இருந்ததாகவும் இதன் காரணமாகவே திலீப் இதைச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கை எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணை 2018ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அதன் பிறகு கொரோனா காரணமாக இரு ஆண்டுகள் வழக்கு விசாரணை முடங்கியது. அதன் பிறகும் கூட பல்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமாகிக் கொண்டே வந்தது.
கடந்த 2020ல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் வழக்கில் எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மலையாள நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீதான வழக்கில் எர்ணாகுளம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம் வர்கீஸ் தீர்ப்பை அறிவித்தார்.இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய A1 to A6 குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார். பல்சர் சுனி, மார்ட்டின் ஆண்டனி, பி. மணிகண்டன், வி.பி.விஜேஷ், எச்.சலீம், மற்றும் பிரதீப் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தண்டனை விவகாரம் வரும் 12ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதேநேரம் திலீப் குற்றவாளி இல்லை என விடுவிக்கப்பட்டுள்ளார். திலீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கத் தவறிவிட்டதாகச் சொல்லி கேரள நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.





















