காஷ்மீர் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி உயிரிழந்தார். 


இறுதி ஊர்வலம் பெரும்பாலானோர் கலந்து கொள்ள கூடும் என்பதால், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், இணைய சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளை  பாதுக்காப்புப் படையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அவரது இறுதி விருப்பப்படி, ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு அரசு நிர்வாக அனுமதி கொடுக்குமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இறுதிச் சடங்குகள் குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படுகிறது.   


அரசியல் தலைவர்கள் இரங்கல்: சையத் அலி ஷா கிலானி மறைவுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசியல் தலைவர்கள் தங்கள்  இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.  


ஜம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டரில், " கிலானி சஹாபின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அநேக விஷயங்களில் கருத்து வேறுபாடுகள்  கொண்டிருந்தாலும், அவரின் உறுதியான மனநிலையை நான் மதிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.  




 சையத் அலி ஷா கிலானி : ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாதத்தை தீவிரமாக முன்னெடுத்ததால் கடந்த 13 ஆண்டுகளாக வீட்டுக் காவலலில் வைக்கப்பட்டிருந்தார். முன்னதாக, ஜமாதி-இ- இஸ்லாம் காஷ்மீர் என்ற அரசியல் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். இந்த அமைப்பு, ஜம்மு- காஷ்மீர் பிரச்சனைக்கு ஐ.நா தலைமையிலான முத்தரப்பு பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வந்தது. 


இதனையடுத்து, காஷ்மீர் பிரிவினைவாதத்தை தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 1993ம் ஆண்டு 26 பிரிவினைவாத அமைப்புகள் ஒன்றிணைந்து ஹூரியத் மாநாடு என்ற அமைப்பை உருவாக்கின. இதன், தலைவர்களில் ஒருவராக சையத் அலி ஷா கிலானி இருந்து வந்தார். 


ஜம்மு -காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய நிலப்பரப்பாகும். இந்தியாவின் ஆக்கிரமப்பில் உள்ளது என்றளவில் தான் புரிந்து கொள்ள வேண்டும் .  இந்தியப் பிரிவினையின் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாகத் தான் ஜம்மு- காஷ்மீர் விளங்கி வருகிறது.   ஜம்மு- காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடை ஹூரியத் அமைப்பு கொண்டிருந்தது. 


காலப்போக்கில், இந்த அமைப்பு மிதவாதத் தலைவர் மிர்வயஸ் உமர் பாரூக் ( Mirwaiz Umar Farooq) தலைமையில் ஒரு பிரிவாகவும், கிலானி தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பிளவுப்பட்டது. 


2019 ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கட்சி ரத்து செய்தது. இதன் பின்னர், ஹூரியத் உறுப்பினர்களின் செயல்பாடு குறைந்துவிட்டது. வீட்டுக் காவலில் வைக்கப்படாத சில தலைவர்கள் கூட மத்திய அரசின் முடிவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.  இதன் காரணமாக, கடந்தண்டு ஜனவரி மாதம், ஹூரியத் மாநாட்டில் இருந்து விலகுவதாக கிலானி அறிவித்தார்.


 






இதுதொடர்பாக, அப்போது  அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ஆகஸ்ட் 5 க்குப் பிறகு, கைது செய்யப்படாத தலைவர்கள் மக்களை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். மக்களுக்கு, சில  நம்பிக்கை இருந்து வந்தது. இக்கட்டான சூழ்நிலையில், நான் உங்களைத் தீவிரமாகத் தேடினேன். ஆனால்,நீங்கள் முன்வரவிவில்லை.தடுப்புக்காவலில் இருப்பதாலும், உடல்நிலை  காரணமாகவும் என்னால் அதிகம் செயல்பட முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.  


பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்: சையத் அலி ஷா கிலானி மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வீரர் சையத் அலி ஷா கிலானி தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவும் அவர்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடியவர். அவரின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இந்திய அரசால் அனைத்துவகையான சித்திரவதைகளை எதிர்கொண்ட போதும், உறுதியாக இருந்தார்.


 






அவரது தைரியமான போராட்டத்திற்கு பாகிஸ்தான் வணக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தான் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்" என்று குறிப்பிட்டார்.