ABP-C Voter Exit Poll 2024 Karnataka: மக்களவை தேர்தல் இன்று மாலையுடன் நிறைவுபெற்ற நிலையில் வெற்றிப் பெறப்போவது யார் என்பது தொடர்பாக, ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை நிலைமை எப்படி உள்ளது என பார்ப்போம்.
மக்களவை தேர்தல்:
இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதியான இன்று வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
கர்நாடக மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி மற்றும் மே 7 ஆம் தேதி ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 4 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் தற்போது 5வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன.
இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளானது, மாநில வாரியாக, எந்த கட்சி எத்தனை சதவிகிதம் வாக்குகளை பெறும் எனவும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில் முன்னிலை யார்?
கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணியானது 41.8 சதவிகித வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 54.2 சதவிகித வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதர கட்சிகள் 4 சதவிகித வாக்குகளை பெற வாய்ப்புள்ளது எனவும் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதைத் தொகுதிகளில் அடிப்படையில் பார்க்கும்போது, கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், பாஜக கூட்டணி 23 முதல் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளிலும் வெற்றியை பெற வாய்ப்புள்ளதாகவும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கருத்து கணிப்பு முறை:
சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, மக்களவைத் தேர்தலுக்கு பின்பு எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம் நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
கருத்து கணிப்பில் பிழை மார்ஜின் அளவானது + - 3% முதல் + - 5% இருக்கலாம் எனவும் 95% நம்பிக்கைத்தன்மை கொண்டதாக இருக்கும் என சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.