கர்நாடகாவில் நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது ஆளும் பாஜக. ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்வது மட்டும் இன்றி, 38 ஆண்டு கால தேர்தல் வரலாற்றை மாற்றி அமைத்து, ஆட்சி கட்டிலில் அமர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த 38 ஆண்டுகளில், எந்த ஆளுங்கட்சியும் ஆட்சியை தக்க வைத்ததே இல்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த தேர்தலை சந்தித்துள்ளது பாஜக. இதேபோன்ற சூழலை, மற்ற மாநிலங்களில் எதிர்கொண்ட போதிலும், சவாலை சமாளித்து தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறை கொண்டுள்ளது பாஜக.
உத்தர பிரதேசம், உத்தராகண்டை தொடர்ந்து கர்நாடகம்:
கடந்த 1985ஆம் ஆண்டுக்கு பிறகு, உத்தர பிரதேசத்தில் ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைத்ததே இல்லை. 2022ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 37 ஆண்டு காலத்திற்கு பிறகு, ஆளுங்கட்சி ஒன்று ஆட்சியை தக்க வைத்தது. அது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுதான்.
அதேபோல, உத்தராகண்ட் மாநிலம், கடந்த 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதில் இருந்து, எந்த ஆளுங்கட்சியும் அங்கு ஆட்சியை தக்க வைத்தது இல்லை. அதை பொய்யாக்கும் விதமாக, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று ஆட்சியை தக்க வைத்தது.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மாநிலத்தை தொடர்ந்து, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. அதற்காக, கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டபோது, தேசிய விவகாரங்களை கையில் எடுத்தது பாஜக. வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகமாக நம்பியுள்ளது பாஜக.
மோடியின் செல்வாக்கை நம்பியுள்ள பாஜக:
இதன் காரணமாக, தேர்தலுக்கு முன்னதாக 20க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. இவர் மட்டும் இன்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை நட்சத்திர பிரச்சாரகர்களாக பாஜக களம் இறக்கியது.
தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்தது. இதோடு நின்று விடாமல், அந்த இடஒதுக்கீட்டை செல்வாக்கு மிக்க சாதி பிரிவுகளான லிங்காயத் மற்றும் வொக்கலிகாவுக்கு பிரித்து வழங்கியது.
அதேபோல, பட்டியல் சமூகத்திற்கான இடஒதுக்கீடு விகிதத்தையும் பாஜக அரசு உயர்த்தியது. இப்படி, தொடர் நடவடிக்கைகளை எடுத்த பின்பும் தேர்தல் களம் சவாலாக உள்ளது என்றே கூறப்படுகிறது.