கர்நாடகாவில் ஏற்கனவே 8 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 24 பேருக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் மாஸ் காட்டிய காங்கிரஸ்:
கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக மாறியது. அக்கட்சியின் இந்த தேர்தல் வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
இதற்கிடையில் அனைவரது எதிர்பார்ப்பும் கர்நாடகாவில் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வியை நோக்கியே இருந்தது. அங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சரான சித்தராமையாவுக்கும், மாநில தலைவரான டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் டெல்லியில் முகாமிட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் முதலமைச்சர் தேர்வில் இழுபறி நீடித்தது. இறுதியாக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து மே 20ம் தேதி பதவியேற்பு விழாவும் கோலாகலமாக நடந்தது. இதனைத் தொடர்ந்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன்படி, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அமைச்சரவை விரிவாக்கம்
இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். சித்தராமையா, சிவக்குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு 26 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்தனர். இந்த பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இவர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்ததை அடுத்து, அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
34 அமைச்சர்கள் பட்டியல்
முதலமைச்சர் சித்தராமையா - நிதித்துறை
துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் - சிறு மற்றும் குறு பாசனம், பெங்களூரு நகர வளர்ச்சி
பரமேஷ்வரா - உள்துறை அமைச்சர்
எச்.கே.பாட்டீல் - சட்டத்துறை அமைச்சர்
கே. எச். முனியப்பா - உணவுத்துறை
கே.ஜே. ஜார்ஜ் - ஆற்றல் துறை
எம்.பி. பட்டீல் - பெரு மற்றும் சிறு தொழில்துறை
ராமலிங்க ரெட்டி - போக்குவரத்து துறை
சதிஷ் - பொதுப்பணித்துறை
பிரியங்க் கர்கே - ஊரக வளர்ச்சித்துறை
ஜமீர் அஹமது கான் - வீட்டு வசதித்துறை
கிருஷ்ணபைரே கவுடா - வருவாய்த்துறை
தினேஷ் குண்டுராவ் - சுகாதாரத்துறை
என்.செலுவராயசாமி - விவசாயத்துறை
கே.வெங்கடேஷ் - கால்நடைத்துறை
எச்.சி.மகாதேவப்பா - சமூக நலத்துறை
ஈஷ்வர் கண்ட்ரே - வனத்துறை
கே.என்.ராஜண்ணா - கூட்டுறவுத்துறை
சரணபசப்பா தர்சனாபூர் - பொதுத்துறை நிறுவனங்கள்
சிவானந்தா பாட்டீல் - ஜவுளித்துறை
திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா - கலால்துறை
எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் - கனிமவளத்துறை
தங்கடகி சிவராஜ் சங்கப்பா - பிற்படுத்தப்பட்டோர் துறை
லட்சுமி ஆர்.ஹெப்பால்கர் - குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை
ரகீம் கான் - நகராட்சி நிர்வாகம்
டி.சுதாகர் - உட்கட்டமைப்புத்துறை
சந்தேஷ் எஸ்.லாட் - தொழிலாளர் நலத்துறை
என்.எஸ்.போஸ்ராஜூ - அறிவியல் & தொழில்நுட்பத்துறை
பி.எஸ்.சுரேஷ் - ஊரக வளர்ச்சித்துறை
மது பங்காரப்பா - பள்ளிக்கல்வி
எம்.சி.சுதாகர் - மருத்துவக்கல்வி
பி.நாகேந்திரா - விளையாட்டுத்துறை