டெல்லியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற விநாயகர் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது பெரும் சர்ச்சையாகி வருவதை பார்க்க முடிகிறது
பிரதமர் - தலைமை நீதிபதி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டின் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் புகைப்படத்தை, பிரதமர் மோடி பகிர்ந்திருந்தார். அதில் தலைமை நீதிபதி மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸுடன் இணைந்து பிரார்த்தனை செய்ததை பார்க்க முடிந்தது.
சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் மோடியை தங்கள் வீட்டில் வரவேற்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது. பின்னர் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற பூஜையில் மோடி பங்கேற்றார்.
இது குறித்து பிரதமர் மோடி X இல் தெரிவித்ததாவது, சந்திரசூட் ஜி இல்லத்தில் விநாயகர் பூஜையில் கலந்து கொண்டேன். பகவான் ஸ்ரீ கணேஷ் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
விமர்சனங்கள்:
இதற்கு பலரும் பலவிதமான கருத்தை சமூக வலைதளங்களில் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. பிரதமர் மோடி, தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றுள்ளது, எதிர்மறையான போக்கை ஏற்படுத்தும் என்றும், தலைமை நீதிபதி தீர்ப்பானது பிரதமர் மோடிக்கு சாதகமாக இருக்கும் எனவும் , இப்புகைப்படத்தை பார்த்து சிலர் விமர்சிக்க கூடும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் சிலர், இதில் என்ன தவறு இருக்கிறது, இது அவர்களது தனிப்பட்ட உரிமை என்றும் சிலர் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.
கபில் சிபல்:
இதுகுறித்து உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல் தெரிவிக்கையில் "நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறேன். பல நீதிபதிகளைப் பார்த்திருக்கிறேன், CJI மிகவும் நேர்மையான நபர் என்று எந்த சந்தேகமும் இல்லாமல் என்னால் சொல்ல முடியும், ஆனால், இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது
மகாராஷ்டிரா தேர்தல் சூழலில் பிரதமர் இதுபோன்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வை காட்சிப்படுத்துவது சரியல்ல" என்று சிபல் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் மக்களின் மனதில் பதிந்திருக்கும். "ஏனென்றால், அதைச் சுற்றி வதந்திகள் எழும். அந்த சூழ்நிலைக்கு நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது என கபில் சிபல் தெரிவித்தார்.