இந்தியாவில் ஜியோ நிறுவனம் மூலம், ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புறங்கள் மற்றும் தொலை தூரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சிறந்த இணைய சேவை கிடைக்கும்.
ஜியோ பிளாட்ஃபார்ம் லிமிடெட் - ஸ்பேஸ் எக்ஸ் ஒப்பந்தம்
உலக அளவில் மிகப்பெரிய ஒரு மொபைல் ஆபரேட்டர் நிறுவனமாக விளங்கி வருகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம். அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த நிறுவனம், சொந்தமாக லோ எர்த் ஆர்பிட் (Low Earth Orbit) செயற்கைக்கோள் வைத்து உலகம் முழுக்க அதிவேக இணைய சேவையை வழங்கிவரும், உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க்கின் அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது.
ஜியோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் இணைப்பினால், இந்தியாவின் உள் பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கும் தடையில்லாத அதிவேக இணைய சேவை கிடைக்கும். ஸ்டார்லிங்க், ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபருடன் இணைந்து விரைவாகவும், குறைந்த விலையிலும் நெட்வொர்க் சேவைகளை வழங்க உள்ளது.
ஜியோ நிறுவனம் என்ன சொல்கிறது.?
ஸ்டார்லிங்குடனான இந்த இணைப்பு, இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு பரிணாமத்தில் ஒரு முக்கிய மைல்கல் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்டார்லிங்க் இணைய சேவையை, தங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் பிராண்ட் மூலம் கிடைக்கச் செய்ய உள்ளதாக ஜியோ கூறியுள்ளது.
சில்லறை விற்பனை கடைகளில் ஸ்டார்லிங்கின் சாதனங்களை வழங்குவதுடன், வாடிக்கையாளர் சேவை மற்றும் சாதனங்களை நிறுவுவதற்கான சேவைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுக்க உள்ள நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் நம்பகமான சேவைகளை வழங்க உள்ளதாக ஜியோ கூறியுள்ளது.
ஒவ்வொரு இந்தியரும், அவர்கள் எந்த பகுதியில் வசித்தாலும் சரி, அவர்களுக்கு குறைந்த விலையில், அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்குவதே ஜியோவின் குறிக்கோள் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மேத்யூ ஓமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை இணையத்தின் மூலம் இணைப்பதில் ஜியோ கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்டுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி க்வைன் ஷாட்வெல் தெரிவித்துள்ளார். விரைவில் அவர்களுடன் இணைந்து இந்திய மக்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்குவதை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.