ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கோடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தேங்தியுள்ள சேறும் சகதியுமான நிறைந்த குட்டையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். சாலையின் மோசமான நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர், உடனடியாக அதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது.
மஹாகாம சட்டப்பேரவை உறுப்பினர் தீபிகா பாண்டே சிங், சேற்று நீர் முழுவதையும் தன் மீது ஊற்றி கொண்டு வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், சாலையில் உள்ள பள்ளங்களை பழுதுபார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வரை அசையமாட்டேன் என்றும் அவர் சபதம் எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், " மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் சண்டையில் நான் ஈடுபட விரும்பவில்லை. மே 2022இல், NH-133 உள்ள பாதையை விரிவுபடுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், இந்த நெடுஞ்சாலையை சரிசெய்ய மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதால், அதை செய்து தருமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் சட்டப்பேரவை கமிட்டி அலுவலர்கள் இந்த இடத்திற்கு வரவில்லை. கோடா எம்பி நிஷிகாந்த் துபேவை ட்வீட்டரில் விமர்சித்த பாண்டே சிங், "மக்கள் பிரதிநிதிகள் இங்கு வந்து அமர்ந்தால்தான் மக்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடியும்" என பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த துபே, “மஹாகாமாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ, முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்த நெடுஞ்சாலையை சாலை கட்டுமானத் துறை பராமரிக்கிறது. மேலும், இதற்காக, மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன்பே 75 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், இதன் சீரமைப்புப் பணிகளுக்கு மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை என்று சிங் குற்றம் சாட்டுகிறார்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
"துபே சொல்வது அப்பட்டமான பொய். மத்திய அரசு எந்தப் பணத்தையும் ஒதுக்கவில்லை" என பாண்டே சிங், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இது தொடர்பாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) மற்றும் சாலை கட்டுமானத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
முன்னதாக, கேரள சாலைகளில் போத்தோல்கள் நிரம்பி இருப்பதை சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அம்மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இவரின் நூதன் போராட்டம் வீடியோவாக இணையத்தில் வெளியாகியது. அந்த கிளிப்பில், வாளி, குவளை, சோப்பு மற்றும் துண்டுடன் மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் நபர் ஒருவர் குளிப்பதைக் காணலாம்.