கொரோனாவுக்காக மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் ஜார்க்கண்ட் அரசாங்கம் 37 சதவீதம் அளவுக்கு வீணாக்கிவிட்டதாகக் கூறுவதா என அந்த மாநில அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.


மற்ற மாநிலங்களை ஒப்பிட மிக அதிக அளவாக 37 சதவீதம் தடுப்பூசிகளை ஜார்க்கண்ட் வீணாக்கிவிட்டது என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இதில் தேசிய சராசரியைவிடக் குறைவாகவே அதாவது 4.65 சதவீதம் அளவில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தடுப்பூசிகள் வீணாகியுள்ளன என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அலுவலகம் தெரிவித்துள்ளது.


நாடளவில் வீணாகும் தடுப்பூசிகளின் சராசரி அளவு 6.3 சதவீதமாக இருக்கிறது. இந்த நிலையில், ” கடந்த புதன்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் இருப்பிலுள்ள தடுப்பூசிகளில் 4.65 சதவீதம் அளவுக்கே தடுப்பூசிகள் வீணாகியிருப்பதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. சில தொழில்நுட்பத் தடங்கல்களால் மத்திய அரசின் கோவின் சர்வரில் மாநில அரசின் முழு விவரத்தையும் தரவேற்றம் செய்யமுடியவில்லை. விவரத்தைப் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.“என்று முதலமைச்சர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதன் சமூக ஊடகப் பக்கத்திலும் தகவல் இடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகளுடன், மத்திய அரசு காணொலி மூலம் ஆலோசனை நடத்தியது. அப்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்தான், தடுப்பூசி வீணாக்குவதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடத்திலும் அதையடுத்து சத்திஸ்கரும் மோசமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  

ஜார்க்கண்ட் 37.3 சதவீதமும் சத்திஸ்கர் 30.2 சதவீதமும் தமிழ்நாடு 15.5 சதவீதமும் ஜம்மு காஷ்மீர் 10.8 சதவீதமும் மத்தியபிரதேசம் 10.7 சதவீதமும் என தேசிய சராசரியைவிட அதிக அளவில் தடுப்பூசிகளை வீணாக்குகின்றன என மத்திய சுகாதார அமைச்சகம் குறைகூறியிருந்தது.   தடுப்பூசி வீணாவதை ஒரு சதவீதத்துக்கும் கீழாகக் குறைக்க அனைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பல மாநிலங்கள் முறையிட்டுவரும் நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி பல இடங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது; பல இடங்களில் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வீணாக்குதல் பற்றிய குறிப்பு வெளியானதால், அந்த மாநில அரசுகள் மீது விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளன.


அதற்கு விளக்கம் அளிக்கும்படியாக, ஜார்க்கண்ட் முதலமைச்சர் அலுவலகம் தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மாநில அரசிடம் உள்ள விவரங்களின் அடிப்படையில், கடந்த புதன்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 33, 36, 950 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 6, 88, 147 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது; 18 முதல் 45வரையிலான வயதுப் பிரிவினருக்கு, 4 லட்சத்து 37 ஆயிரத்து 122 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் அலுவலகம் கூறியுள்ளது.


மேலும், “ஜார்க்கண்ட் மாநில அரசானது சாத்தியமாகக்கூடிய எல்லா உரிய வழிமுறைகள் மூலமாகவும் அனைத்து தடுப்பூசிகளையும் பயன்படுத்துவதில் கவனம்செலுத்துகிறது. வீணாவதை மிகக்குறைவாக ஆக்கவும் முனைப்பு காட்டுகிறது. இத்துடன் அடர்ந்த வனப்பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கூடுதல் கவனம்செலுத்தப்படும்.”என்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.