Jharkhand CM : "என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை போராடுவேன்” : அரசியல் நெருக்கடிகளுக்கு இடையில் ஜார்க்கண்ட் முதல்வர் உறுதி


ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ஹேமந்த் சோரனும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் ரகசிய இடத்திற்கு பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும், கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை போராட உள்ளதாகவும் சோரன் தெரிவித்துள்ளார்


ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூன்று பேருந்துகளில் ஏறி சென்றுள்ளனர். அங்கு பலத்து பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சத்தீஸ்கரில் பர்முடா, ராய்பூர் உள்ளிட்ட மூன்று இடங்களிலும், மேற்கு வங்கத்திலும் எம்எல்ஏக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


ஜார்க்கண்ட அரசு நட்பு பாராட்டும் மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாற்றப்படுவதாகவும், அது மேற்கு வங்கம் அல்லது சத்தீஸ்கராக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக அல்லத அரசே ஆட்சியில் உள்ளது.


பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஆளும் கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முதலமைச்சரின் வீட்டில் நடைபெற்றது. மாறி வரும் அரசியல் சூழல் குறித்து வியூகம் அமைக்க ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டது.


ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் சாமான்களுடன் கூட்டத்தில் பங்கேற்றனர். சோரன், எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (இசிஐ) அனுப்புவார் என்று ஆளுநர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


விஷயம் அறிந்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "தேவை ஏற்பட்டால் ஆளும் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே இடத்திற்கு அனுப்பப்படுவார்கள். தற்போது நடைபெற்று வரும் இந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது லக்கேஜ்களுடன் முதலமைச்சர் இல்லத்திற்கு வந்துள்ளனர்" என்றார்.


விறுவிறுப்பாக மாறி வரும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் ரிசார்ட் அரசியல் மீண்டும் தலை தூக்கி உள்ளது. ஆளும் கூட்டணியின் பெரும்பான்மையை சீர்குலைத்துவிடாத வகையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளனர் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இதற்கிடையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்ற பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தனது ட்வீட் பக்கத்தில், "ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வட்டாரங்களின்படி, சில எம்எல்ஏக்கள் அதிகாலை 2 மணிக்கு சத்தீஸ்கரை அடைந்தனர். பெரும்பாலான எம்எல்ஏக்கள் செல்ல தயங்கி ஜேஎம்எம் மூத்த தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள். பசந்த் சோரன், எம்எல்ஏக்களுக்காக ராஞ்சியில் சில பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன" என பதிவிட்டுள்ளார்.


சுரங்க குத்தகையை தனக்கு அளித்ததன் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக சோரன், எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிய மனுவில் ஆகஸ்ட் 25 அன்று பாயிஸுக்கு தேர்தல் ஆணையம் தனது நிலைபாட்டை அனுப்பியது.


சட்டப்பேரவை உறுப்பினராக சோரன் தகுதிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில், சோரனின் மனைவியோ அல்லது தாயாரோ முதலமைச்சராக ஆக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.