சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன. இருப்பினும், சில பகுதிகளில் அவ்வப்போது நக்சல் தாக்குதல் நடந்து வருகிறது.
ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் தாக்குதல்:
இந்த நிலையில், ஜார்க்கண்ட் சத்ரா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சதர் மற்றும் பாசிஸ்த்நகர் ஜோரி காவல் நிலைய பகுதிகளுக்கு இடையே உள்ள பைரியோ வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் விவரங்களை பெற்று வருகிறோம்" என்றார்.
சமீபத்தில், சத்தீஸ்கர் பிஜாப்பூர் - சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. சுக்மா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அவர்கள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் கூறினர்.
கடந்த மாத தொடக்கத்தில், நக்சல்களின் கோட்டை என கருதப்படும் சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் இரண்டு போலீஸ் முகாம்களை பாதுகாப்புப் படையினர் அமைத்தனர். இதை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று, சுக்மா-பிஜப்பூர் பகுதியில் முதன்முறையாக இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
"மனித குலத்திற்கு நக்சலிசம் ஒரு சாபக்கேடு"
சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் இடதுசாரி தீவிரவாதம் (LWE) தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் ஒரு ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதில் பேசிய அவர், "இடதுசாரி தீவிரவாதம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்.
கடந்த நாற்பது ஆண்டுகளிலேயே 2022ஆம் ஆண்டுதான், நக்சல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இறப்புகள் பதிவாகியுள்ளது. நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களிலும் அதை வேரோடு பிடுங்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
இதையும் படிக்க: UCC: சொல்லி அடித்த பாஜக! சுதந்திர இந்தியாவில் முதல்முறை...உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!