ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பமாகி 7 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகள் பிறந்தன.


5 குழந்தைகள்:


திங்கட்கிழமை ரிம்ஸ் மருத்துவமனையில் இந்த 5 குழந்தைகளும் பிறந்தது. குழந்தைகள் அனைவரும் பெண் குழந்தைகள் என்றும், குறைந்த எடையுடன் பிறந்தவர்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு சாதாரண இயற்கையான பிரசவம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது தாயின் உடல்நிலை சீராக உள்ளதால் குழந்தைகள் அனைவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த 25 வயதான ஹலிமா சிஸ்சே என்ற பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தது. இதில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் ஆவார்கள். இதன் மூலம் ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தவர் என்ற உலக சாதனையை ஹலிமா சிஸ்சே படைத்தார்.


ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்:

ஆனால் இந்த சாதனை சில மாதங்களிலேயே முறியடிக்கப்பட்டது.  தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்தார். அந்த நாட்டை சேர்ந்த 37 வயதான கோஷியாமி தமாரா சித்தோலுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த ஆந்த பெண்ணுக்கு பரிசோதனையில் 8 குழந்தைகள் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டு இருந்தது. கோஷியாமி தமாரா சித்தோலுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிசேரியன் செய்து 7 ஆண், 3 பெண் என மொத்தம் 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கோஷியாமியின் கணவர் டெபோஹோ கூறும்போது, 10 குழந்தைகள் பிறந்து இருப்பது என்னை உணர்ச்சி வசமாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கியுள்ளது என்றும் எனது மனைவி இயற்கையாகவே கருத்தரித்தார் எனவும் தெரிவித்தார்.


எந்த மருத்துவ சிகிச்சையும் எடுக்கவில்லை என்றார். கோஷியாமி கூறும்போது, எனக்கு முதலில் ஸ்கேன் செய்தபோது 6 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 குழந்தைகள் இருப்பதாக கூறினார்கள். நான் கர்ப்பம் அடைந்ததில் இருந்து கடினமாக உணர்ந்தேன். ஏனென்றால் நான் பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். என் அனைத்து குழந்தைகளையும் ஆரோக்கியமான நிலையில் வளர்க்க எனக்கு உதவும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன் என்றார் அந்த பெண்.