சுற்றுலா, புனித பயணம் மற்றும் வணிகப் பயணிகளுக்காக மெட்ரோ நகரங்களை இணைக்க இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் விரைவு பயணிகள் ரயில் சேவையே சதாப்தி எக்ஸ்பிரஸாகும். இதை, இந்தியாவில் சூப்பர்ஃபாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. போய் சேர வேண்டிய இடத்திற்கு சென்று விட்டு அதே நாளில் கிளம்பிய இடத்திற்கு இந்த ரயில் வந்து சேர்ந்துவிடும்.
குறுகிய மற்றும் நடுத்தர தூரம் கொண்ட இடங்களுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், இதற்கான டிக்கெட் விலை சற்று அதிகமாகும். எனவே, இதை காட்டிலும் குறைவான டிக்கெட் விலை கொண்ட ரயில் சேவைதான் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்.
'ஜன்' என்ற சொல் சாதாரண மக்களைக் குறிக்கிறது. சதாப்தி எக்ஸ்பிரஸின் சிக்கனமான பதிப்பாக இருந்தாலும், பயணிகளுக்கு குளிரூட்டப்பட்ட நாற்காலி வசதி, இரண்டாம் வகுப்பு இருக்கை மற்றும் முன்பதிவு செய்யப்படாத வகுப்புகளை இது வழங்குகிறது.
இந்நிலையில், ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் முதல்முறையாக 130 கிமீட்டர் வேகத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து மண்டல ரயில்வே மேலாளரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கதில் குறிப்பிடுகையில், "12077 எண் கொண்ட ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் முதல்முறையாக 130 கிமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே வரலாறு படைத்துள்ளது.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து காலை 7:25 மணிக்கு சேருமிடமான விஜயவாடாவை நோக்கி கிளம்பிய 12077 எண் கொண்ட ரயில் 130 கிமீட்டர் வேகத்தில் சென்றது. சூலூர்பேட்டைக்கு 8 நிமிடத்திற்கு முன்னதாகவே சென்றது. நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே, கூடூருக்கு காலை 9:29 மணிக்கு சென்றது.
ஏசிபி (அலாரம் செயின் இழுத்தல்) காரணமாக நாயுடுபேட்டையில் 7 நிமிடங்களை இழந்தது. இல்லையெனில் கூடூர் ஸ்டேஷனில் 20 நிமிடங்கள் முன்னதாக இருந்திருக்கலாம்.
அனைத்து வழித்தடங்களிலும் வேகத்தை அதிகரிக்கவும், பயணிகள் தங்கள் இலக்கை விரைவாக அடைவதை உறுதி செய்யவும் சென்னை கோட்டம் உறுதிபூண்டுள்ளது" என பதிவிடப்பட்டுள்ளது.