Rivaba Jadeja Minister: அமைச்சரானார் ஜடேஜாவின் மனைவி ரிவாபா; குஜராத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
குஜராத்தில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்ற நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா அமைச்சராகியுள்ளார்.

குஜராத்தில், பாஜக-வைச் சேர்ந்த முதலமைச்சர் பூபேந்திர படேலை தவித்து அமைச்சர்கள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்த நிலையில், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. அதில் ஒரு அமைச்சராக, பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா இடம்பெற்றுள்ளார்.
கூண்டோடு ராஜினாமா செய்த குஜராத் அமைச்சர்கள்
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த 2022-ல் நடந்த சட்டசபை தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம், பூபேந்திர படேல் 2-வது முறையாக முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.
அவரது அமைச்சரவையில் 16 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில், 8 பேர் கேபினட் அந்தஸ்துடனும், மற்றவர்கள் இணை அமைச்சர்களாகவும் இருந்தனர். குஜராத் சட்டசபையில் 182 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மாநில அரசில் 27 பேர் அல்லது, மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 15% பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும்.
அந்த வகையில், மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என நேற்று காலை அரசு அறிவித்தது. அதற்கு வசதியாக, முதலமைச்சர் பூபேந்திர படேலை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் மாலையில் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
இன்று பதவியேற்ற புதிய அமைச்சரவை
இந்த நிலையில், நேற்று அறிவித்தபடி, 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை குஜராத் அரசு இன்று காலை வெளியிட்டது. அதில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, ஸ்வரூப்ஜி தாலுர், பிரவின்குமார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வஹேலா, குன்வர்ஜி பலாலியா, அருண் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வாஹானி, பிரபுல் பன்ஷேரியா, ஹர்ஷ் சங்வி, கனுபாய் தேசாய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த அமைச்சரவையில் இருந்த 9 பேருக்கு இந்த முறை அமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். காந்தி நகரில் நடந்த விழாவில், அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா கலந்துகொண்டார்.
அமைச்சரான ரிவாபா ஜடேஜா
இந்த புதிய அமைச்சரவையில், பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாட இடம்பெற்றுள்ளார். அவர், கடந்த 2019-ம் ஆண்டு பாஜக-வில் இணைந்த நிலையில், தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வாக உள்ளார். இவர், கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 3 ஆண்டுகளாக எம்எல்ஏ-வாக செயல்பட்டு வரும் இவருக்கு தற்போது அமைச்சர் பதவி கிடைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.





















