J&K Poll BJP: பிரதமர் மோடி இலவச திட்டங்களை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள பாஜக:
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான தங்களது வாக்குறுதிகளை, பாஜக நேற்று வெளியிட்டது. அதில் நம்பகத் தன்மையை உறுதி செய்தல், கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுப்பது மற்றும் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட 25 உத்தரவாதங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக, ஜம்மு & காஷ்மீர் சென்றுள்ள நிலையில் இந்த வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுவதாக பாஜக உறுதியளித்துள்ளது.
”100 கோயில்களை மிட்டெடுப்போம்”
”வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கி, பிராந்தியத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்வோம்" என்று பாஜக தெரிவித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 100 "பாழடைந்த கோயில்களை" மீட்டெடுப்பதோடு, காஷ்மீர் புலம்பெயர்ந்த பண்டிட்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை அழித்து, ஜம்மு-காஷ்மீரை தேசத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முன்னணி பிராந்தியமாக்குவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச அறிவிப்புகள்:
இளைஞர்களுக்கு ஆதரவாக, தொலைதூரப் பகுதிகளில் உள்ள மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு டேப்லெட் மற்றும் மடிக்கணினிகள், கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3,000 பயணக் கொடுப்பனவு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் ரூ. 1,000 முதல் ரூ. 3,000 என, மூன்று மடங்காக உயர்த்தப்படும். அடல் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிலமற்றவர்களுக்கு இலவச நிலம் வழங்குவது மற்றும் மின் கட்டணத்தை குறைப்பது போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த பெண்ணுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 18,000 வழங்க 'மா சம்மன் யோஜனா' என்ற திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 370 மீண்டும் வராது - அமித் ஷா:
370வது பிரிவு பற்றிய பாஜகவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமித் ஷா, "பிரிவு 370 வரலாறு, அது திரும்ப வராது, நடக்க விடமாட்டோம். 370வது பிரிவு இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களையும் கற்களையும் கொடுத்தது" என தெரித்தார்.
இலவசங்களை எதிர்க்கும் மோடி:
மாநில அரசுகள் இலவச திட்டங்களை செயல்படுத்துவதால், நிதிச்சுமைகளை எதிர்கொள்வதாக பிரதமர் மோடி சாடி வருகிறார். தேர்தலை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இலவச திட்டங்களை கைவிட வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி அங்கம் வகிக்கும் பாஜகவே, ஜம்மு &காஷ்மீர் தேர்தலுக்காக பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.