இன்று  இரண்டாவது நாளாக பிரதமர் மோடி மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடத்தப்படுகிறது. மேலும் இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி பதிலளிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நம்பிக்கையில்லா தீர்மானம்: 


நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதனை பிரதமர் மோடி கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டி, அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர்.


இதனைத்தொடர்ந்து இதற்கான நோட்டீஸ் எதிர்க்கட்சிகள் தரப்பில் வழங்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதங்கள் பற்றி சபாநாயகர் அறிவிக்காமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று முதல் 10 ஆம்  தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த விவாதங்கள் மீதான பதில்களை பிரதமர் மோடி முன்வைப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


பேசப்போகும் ராகுல்காந்தி:


இந்நிலையில் நேற்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாதங்களை காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் தொடங்கி வைத்தார். அதற்கு பிரகலாத் ஜோதி, ”ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என கூறப்பட்ட நிலையில், அவர் பெயரை ஏன் நீக்கி விட்டீர்கள்” என கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய, கவுரவ் கோகாய், ”மணிப்பூர் விவ்காரத்தில் நீதி வேண்டும், மணிப்பூர் பற்றி எரிந்தால் நாடு பற்றி எரியும். மணிப்பூர் பிளவுப்பட்டால் நாடு பிளவுபடும். ஒரே நாடு என பேசும் உங்களால், மணிப்பூர் இரண்டாகி விட்டது. மேலே ஒரு மணிப்பூர், பள்ளத்தாக்கில் ஒரு மணிப்பூர் என ஆகிவிட்டது.


பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கலந்துக்கொள்ளாமல், மணிப்பூர் விவகாரம் பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார். அவரது மௌன விரதத்தை கலைக்கவே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற தலைவர்கள் மணிப்பூர் சென்றுள்ளனர். பிரதமர் மோடி ஏன் சென்று பார்க்கவில்லை? கலவரம் நடக்கும் போது கர்நாடகாவில் ஓட்டு கேட்க சென்றார். என்ன தேசியம் இது? “ என கேட்டுள்ளார்.


அதனை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, “குஜராத் கலவரத்தின்போது, வாஜ்பாய், ராஜதர்மத்தின் பின்னால் நின்றார். ஆனால், பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்களுக்கு பின்னால் நாம் நிற்க முடியவில்லை. மணிப்பூர் நிகழ்வுகளை ஒட்டுமொத்த உலகமும் கண்டிக்கிறது. பிரதமர் மோடியை சபைக்கு அழைத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசவைக்க இந்த  நம்பிக்கையில்லா தீர்மானத்தை நான் ஆதரிக்கொறேன்” என கூறினார்.


பாஜக பதில் வாதம்:


தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தங்களது வாதங்களை முன்வைத்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில், நிஷிகாந்த் துபே பதிலளித்து பேசினார், அப்போது, “ எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கிடையே பல பிரச்சனைகள் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. கூட்டணி பெயரான ‘இந்தியா’ விரிவாக்கத்தை கேட்டால் பலருக்கும் சொல்லத் தெரியாது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், ஒரு ஏழைத்தாயின் மகனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்கு வீடு, குடிநீர், கழிப்பறை, மின்சாரம் கொடுத்தவருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களை பிடித்து வெற்றிப்பெரும்” என பதிலளித்தார்.


இரண்டாவது நாள்: 


இப்படி பல மணி நேர விவாதங்களுக்கு பின் நேற்றைய அவை முடிவுக்கு வந்து இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் மத்திய அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்வதுடன், இன்றைய விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.