நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.


மாஸ் காட்டும் இஸ்ரோ:


நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தில் பல கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.


அனுப்பப்பட்ட கருவிகளின் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ, நிலவின் வெப்பநிலை தொடர்பான ஆய்வின் தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.


நிலவில் லேண்டர் இருக்கும் 3D போட்டோவை எடுத்த ரோவர்:


இந்த நிலையில், நிலவில் லேண்டர் இருப்பது போன்ற முப்பரிமாண (3D) படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரோ வெளியிட்ட பதிவில், "அனாக்லிஃப் புகைப்படம் என்பது ஒரு பொருளையோ நிலபரப்பையோ ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களிலிருந்து முப்பரிமாண வடிவில் எளிமையாக காட்சிப்படுத்துவது ஆகும்.


பிரக்யான் ரோவரில் உள்ள நவ் கேம் ஸ்டீரியோ இமேஜஸைப் பயன்படுத்தி இங்கு வழங்கப்பட்ட அனாக்லிஃப் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவ் வலது, இடதுபுற காட்சிகளை உள்ளடக்கியது கேம் ஸ்டீரியோ இமேஜஸ். இந்த முப்பரிமாண புகைப்படத்தில் இடதுபுற படம் சிவப்பு நிறத்தில் தெரிகிறது. அதே நேரத்தில் வலதுபுற படம் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தெரிகிறது.


 






இந்த இரண்டு படங்களுக்கிடையேயான கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடு ஸ்டீரியோ விளைவை ஏற்படுத்துகிறது. இதுதான், மூன்று பரிமாணங்களின் காட்சி தோற்றத்தை அளிக்கிறது. 3Dயில் பார்க்க விரும்பினால், சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன NavCam கேமராவானது, இஸ்ரோவின் மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளை விண்வெளி பயன்பாட்டு மையம் ஆய்வு செய்து வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.