மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்டோபர் 21ல் நடைபெறும் என்றும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அக்டோபர் 21ம் தேதி காலை 7 முதல் 9 மணிவரை சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. 


மனிதர்களை விண்கலத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 400 கி.மீ கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.  






ககன்யான் திட்டம் என்றால் என்ன..?


பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலையில் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்தான் ககன்யான் திட்டம். மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்தின்போது இந்திய விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் குழுவை சோதிப்பதற்காக சோதனை வாகன மேம்பாட்டு விமானம் (டிவி-டி-1) அடுத்த ஆண்டு பிற்பகுதியில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடத்தப்பட இருக்கிறது. 


7 நாட்கள் பூமியை சுற்றி வருமா..? 


மனித விண்வெளிப் பயணத்தின் போது (முதல் மனித விண்வெளிப் பயணம்) ககன்யான் இந்திய விண்வெளி வீரர்களை ஏழு நாட்களுக்கு பூமியைச் சுற்றி அனுப்பும் என்பது இஸ்ரோவின் முந்தைய திட்டமாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி ககன்யான் ஒன்று அல்லது மூன்று நாட்கள் மட்டுமே பூமியைச் சுற்றி வர ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த பணியில் முன்னேற்றங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன. சோதனையின்போது பல நேரங்களில் குறைபாடுகளும் கண்டறியப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. மூன்று விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக, இரண்டு அல்லது ஒரு விண்வெளி வீரர் மட்டுமே இந்த பயணத்தில் செல்வார் என்றும் கூறப்படுகிறது. ககன்யானின் குழுவானது பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கீழ் பூமி சுற்றுப்பாதையில் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பப்படும். 


புதிய பூஸ்டர் சோதனை:


கடந்த 2022 மே 13ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மனித மதிப்பிடப்பட்ட திட ராக்கெட் பூஸ்டர் அதாவது HS200 ஐ ஐ இஸ்ரோ வெற்றிகரமாக சோதித்தது. GSLV-MK3 ராக்கெட்டின் S200 பூஸ்டருக்குப் பதிலாக இந்த பூஸ்டர் நிறுவப்பட இருக்கிறது. 


பெங்களூரில் காக்னாட்ஸ் பயிற்சி:


இந்திய விமானப்படையின் நான்கு விமானிகள் ககன்யானுக்காக ரஷ்யாவில் பயிற்சி முடித்துள்ளனர். மாஸ்கோவிற்கு அருகிலுள்ள ஜியோக்னி நகரில் அமைந்துள்ள ரஷ்ய விண்வெளி பயிற்சி மையத்தில் விண்வெளி வீரர்களாக ஆவதற்கான பயிற்சி பெற்றனர். மேலும், இந்திய விமானப்படை விமானிகள் காகரின் விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற நிலையில், தற்போது பெங்களூரில் ககன்யான் மாட்யூல் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.