தலைப்பைப் படித்ததும், உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா என்ற விளம்பரம் நினைவுக்கு வருதா?! டூத்பேஸ்டில் உப்பு இருக்கலாம். ஆனால், நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் மிளகாய்த் தூளில் செங்கல் பொடி இருக்கக் கூடாது. அது பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது FSSAI.
எஃப்எஸ்எஸ்ஏஐ என்பது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம். இது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடித்து வலிமையான சட்டங்கள் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த அமைப்பு அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில், கலப்பட மிளகாய்ப் பொடியை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து எளிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் உள்ளபடி நீங்கள் செய்யவேண்டியது இதுதான்:
ஒரு கண்ணாடி டம்ப்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மிளகாய்ப் பொடியைப் போடுங்கள். அந்தப் பொடி கீழே சென்று டம்ப்ளரின் அடியில் தங்கினால் அந்தப் பொடி கலப்பட பொடி. அவ்வாறு தங்கிய பொடியை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விரலைக் கொண்டு அந்தப் பொடியைத் தேய்த்துப் பாருங்கள். அது நறநறவென்று இருந்தால் அதில் செங்கல்தூள் இருக்கிறது என அர்த்தம். ஒருவேளை அந்தப் பொடியை நீங்கள் உள்ளங்கையில் வைத்து தேய்க்கும்போது வழவழப்பாக இருந்தால் அதில் சோப் ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணும் உணவுப் பொருட்களை மக்கள் காசு கொடுத்துதான் வாங்குகிறார்கள். ஆனால், அதில் லாபத்துக்காக கலப்படம் செய்வது எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றம் தெரியுமா? மேலும் இவ்வாறான கலப்படப் பொருட்களை உண்பதால் மக்களுக்கு கேன்சர் தொடங்கி நரம்பியல் நோய்கள் வரை பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு உணவுப் பொருளிலும் இதைத் தான் சேர்க்கலாம், இதையெல்லாம் சேர்க்கக் கூடாது என்று தர நிர்ணயம் செய்துள்ளது FSSAI.
கலப்படம் செய்தால் என்ன தண்டனை?
இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954ம் ஆண்டு அமலாக்கப்பட்டது. இதினுள்ள பிரிவு 12ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். இச்சத்திலுள்ள பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகையை திரும்பப் பெறும் வசதி உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூ.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும்.