சமீப காலமாகவே, நீதிமன்றங்கள் சர்ச்சையான கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாக வருகிறது. அவை, அனைத்தும் சமூகத்தில் பெரிய விவாதங்களை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 


உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் மனித உரிமைகள் ஆர்வலருமான இந்திரா ஜெய்சிங், நீதிமன்றம் விதித்த ஒரு உத்தரவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி தேதியிடப்பட்ட நோட்டீஸில், பெண் வழக்கறிஞர்கள், தங்களின் முடியை சரிசெய்துகொள்ள கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதில், புனே மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர் கையெழுத்திட்டுள்ளார். அதில், "பெண் வழக்கறிஞர்கள் தங்கள் தலைமுடியை திறந்த நீதிமன்றத்தில் சரிசெய்துகொள்வதாக நீதிமன்றத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதாக பலமுறை கவனிக்கப்படுகிறது. எனவே, இது போன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு பெண் வழக்கறிஞர்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.






இந்த நோட்டீஸை ட்விட்டரில் பகிர்ந்த இந்திரா ஜெய்சிங், "ஆஹா இங்கே பாருங்கள்! பெண் வக்கீல்களால் திசை திருப்பப்படுவது யார், ஏன்!" என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் 3,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெண்களுக்கு எதிரானது என்றும் பாரபட்சமானது என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி ஆடை அணிந்து கொள்ள வேண்டும் என பாடம் எடுப்பது தெருக்களில் இருந்து தற்போது நீதிமன்றம் வரை நீண்டுள்ளது.






கடந்த அக்டோபர் 2019-ஆம் ஆண்டில், பெங்களூரில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஒரு நபர் ஷார்ட்ஸை அணிந்திருக்கும் பெண்ணிடம், இந்திய கலாசாரத்தை பின்பற்றவேண்டும் என்றும் முறையான ஆடைகளை அணியவும் எனக் கூறுவதைக் கேட்கலாம். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.