Indias population: உள்நாட்டில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருவதாக, இந்திய மக்கள் தொகை ஆய்வு சங்கம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement


சரியும் குழந்தைகள் பிறக்கும் விகிதம்:


இந்தியாவில் தற்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.9 ஆக இருப்பதால், 2080 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 180 கோடி அல்லது 190 கோடிக்கு அருகில் நிலைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய மக்கள் தொகை ஆய்வு சங்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரன் தெரிவித்துள்ளார்.  கடந்த 20 ஆண்டுகளில் குறைந்தைகள் பிறப்பு விகிதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பேசியுள்ளார். குறிப்பாக, “2000 ஆம் ஆண்டில் 3.5 ஆக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் இன்று 1.9 ஆக உள்ளது. இது ஒரு கடுமையான சரிவு” என குறிப்பிட்டுள்ளார். இதனால், இந்தியாவின் அதிகபட்ச மக்கள்தொகையாக என்பது 200 கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்தது ஏன்?


வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்தியாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவதற்கு அதிகரித்த வளர்ச்சி மற்றும் கல்வித்தரம் தான் காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக சந்திரன் பேசுகையில், “பெண் கல்வி அதிகரித்து இருப்பதால் திருமணம், குழந்தைகள், சிறிய குடும்பங்களை முன் நின்று வழிநடத்துவது, ஆகியவற்றில் மகளிரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.  கருத்தடை சாதனங்களின் அதிக பயன்பாடு மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டிற்கான பரந்த அணுகல் ஆகியவை சரிவை மேலும் துரிதப்படுத்தியுள்ளன.


இன்றைய தம்பதிகள் எப்போது, ​​எத்தனை குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதில் அதிக கட்டுப்பாட்டைப் பயன்படுத்துகின்றனர். பலர் வாழ்க்கையின் பிற்பகுதியில் திருமணம் செய்து கொள்ளவும், பொருளாதார வாய்ப்புகளை வளர்த்துக் கொள்ளவும் தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக பெண்கள் அதிகளவில் தொழில்களைத் தொடங்குகின்றனர் . இது குழந்தையை பெற்றுக் கொள்ளும் தேர்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.


பிறப்பு விகிதத்தை குறைக்கும் வளர்ச்சி


அதிகரித்த வளர்ச்சி கருவுறுதலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சந்திரன் குறிப்பிட்டுள்ளார். “வளர்ச்சி பிறப்பு விகிதங்களுக்கு நேர்மாறான விகிதாசாரமாகும் . கல்வியறிவு இல்லாத தரப்பினரிடையே இன்னும் கருவுறுதல் நிலைகளை மூன்றுக்கு மேல் உள்ளன. ஆனால் படித்தவர்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் என்பது 1.5 முதல் 1.8 வரை உள்ளது.


பராமரிப்பில் சிக்கல்


சந்திரன் அளித்த தகவல்களின்படி, ”பிறப்பு விகிதம் குறைந்து வந்தாலும், மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்துள்ளது.அதிகமான மக்கள் 60 வயதுக்கு மேல் வாழ்கின்றன. இது முதியோர் பராமரிப்பில் புதிய சவால்களைக் கொண்டுவருகிறது, குறிப்பாக இளையோர் வேலை வாய்ப்புகளுக்காக பெற்றோரை விட்டு விலகுவதால் இந்த சூழல் ஏற்படுகிறது" என்கிறார்.


1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய மக்கள் தொகை ஆய்வு சங்கம், சுமார் 1,100 மக்கள்தொகை ஆய்வாளர்கள் மற்றும் மக்கள்தொகை விஞ்ஞானிகளைக் கொண்டுள்ளது. அறிக்கையின்படி, UNFPA, மக்கள்தொகை கவுன்சில் மற்றும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவுடன் இந்த அமைப்பு தொடர்ந்து மக்கள் தொகை பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.