Aditya L1 spacecraft: சூரியனை ஆராயும் நோக்கில் விண்ணிற்கு செலுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், ஆதித்யா  விண்கலம் வெற்றிகரமாக எல்1 எனப்படும் லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிய சாதனையை படைத்துள்ளது.


பிரதமர் மோடி பெருமிதம்:


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்தியா மற்றொரு புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முதல் சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோளான ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்தது. மிகவும் சிக்கலான மற்றும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடர்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.






ஆதித்யா எல்1 விண்கலம்:


சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது. புவியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஆதித்யா எல்-1 விண்கலம்,  படிப்படியாக அடுத்தடுத்து இலக்கை நோக்கி உந்தி தள்ளப்பட்டன.  செப்டம்பர் 30 ஆம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. பூமியின் ஈர்ப்பு  விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்காக லெக்ராஞ்சியன் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது. இந்த நிலையில் தான், பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் எல்1 புள்ளியை ஆதித்யா எல்1 விண்கலம் எட்டியுள்ளது.


ஆராய்ச்சிப் பணிகள்:


ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இதற்காக அந்த செயற்கைகோளில், சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் இடம்பெற்றுள்ளன. லெக்ராஞ்சியன் புள்ளியில் எந்த கிரகணமும் (சந்திர கிரகணம், சூரிய கிரகணம்) குறுக்கே வராத காரணத்தால், இடையூறு ஏதுமின்றி ஆய்வுப் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.