Poverty: அண்மையில் வெளியான நுகர்வோர் செலவின கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டின் வறுமை 5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் நிதி அயோக் தலைவர் நிர்வாகி அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் 5 சதவீதம் குறைந்த வறுமை:
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் 2022-23ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவினங்கள் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நிதி அயோக் தலைவர் நிர்வாகி அதிகாரி சுப்ரமணியன் கூறுகையில், ”2011-12ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23ஆம் ஆண்டில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவினம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுமார் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. நகர்ப்புற குடும்பங்களில் சராசரி மாதாந்திர தனிநபர் செலவினம் 2011-12ஆம் ஆண்டில் இருந்து 33.5 சதவீதம் உயர்ந்து ரூ.3,510 ஆக உள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறத்தில் மாதாந்திர தனிநபர் செலவினம் 2011-12ஆம் ஆண்டில் இருந்து 40.42 சதவீதம் உயர்ந்து ரூ.2,008 ஆக உள்ளது.
இந்த தரவுகளின் அடிப்படையில் நாட்டின் வறுமை 5 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருக்கலாம். இதனால், இந்தியாவில் மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. அதாவது முழுமையான வறுமையில் வாழ்பவர்கள் இப்போது 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளனர்" என்று கூறினார்.
உணவு பொருட்களின் செலவினம் குறைவு:
நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் நுகர்வு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையிலான இடைவெளி கணிசமாக குறைந்து வருகிறது. 2011-12ஆம் ஆண்டில் 84 சதவீதமாக இருந்த இந்த இடைவெளி, 2022-23ஆம் ஆண்டில் 71 சதவீதமாக குறைந்துள்ளது.
இதே நிலை நீடித்தால், வரும் ஆண்டுகளில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வருவாய் மற்றும் செலவினம் ஒரே மாதிரியாக மாறலாம். மக்கள் உணவு பொருட்களுக்காக செலவு செய்வதை விட, மற்ற பொருட்களுக்கு அதிகமாக செலவு செய்கின்றனர். உணவு அல்லது பொருட்களுக்கு கிராமப்புறங்களில் 5 சதவீதத்திற்கு குறைவாகவும், நகர்ப்புறங்களில் 4 சதவீதத்திற்கும் குறைவாக செலவு செய்கின்றனர்.
மெட்ரோ, பேருந்துகள், வண்டிகள் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் பயன்படுத்துவதற்காகவும், தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதன பெட்டிகளை வாங்குவதற்கும் மக்கள் அதிக செலவு செய்கிறார்கள் என்று நிதி அயோக் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 10 ஆண்டு காலம் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியின் சாதனைகள் பெரும் விவாத பொருளாகி வருகிறது. வேலையின்மை, விலைவாசி, பணவீக்கம் ஆகியவற்றை வைத்து எதிர்க்கட்சிகள் பாஜகவை சாடி வருகின்றன.
மக்களுக்கான நலத்திட்டங்களை செய்யாமல், ராமர் கோயிலை கட்டி மக்களை திசை திருப்ப பாஜக முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக நிதி ஆயோக் அறிவிப்பு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.