செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


காலங்கள் மாறி விட்ட நிலையில் இன்று நம் அனைவரது வீடுகளிலும் செல்லப்பிராணிகள் தேவை என்பது இன்றியமையாததாகி விட்டது. சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக நாம் வெளியூருக்கு பயணம் மேற்கொள்ள நேரிட்டால் செல்லப்பிராணிகளின் நிலைமை எண்ணியே நாம் கவலையடைவோம். அதனை உடன் அழைத்து செல்லலாம் என நினைத்தால் சில போக்குவரத்து சேவைகள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை. 


இதனிடையே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் செல்லப்பிராணிகளை ரயில் பயணத்தில் அழைத்துச் செல்லலாம் என உரிமையாளர்களுக்கு இந்திய ரயில்வே நிர்வாகம்  அனுமதி வழங்கியது. மேலும் இந்த விஷயத்தில் சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அதன்படி இரண்டாம் வகுப்பு மற்றும் பிரேக் வேனில் உள்ள நாய் பெட்டியில் வைத்து தங்கள் செல்லப்பிராணிகளை பயணிகள்  கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் உங்களுடன் அழைத்து செல்ல விரும்பினால் நான்கு  அல்லது இரண்டு இருக்கைகள் கொண்ட முதல் வகுப்பு ஏசி டிக்கெட்டுகளை புக் செய்து அழைத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. 


மேலும் பெட்டியில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல கிலோவுக்கு ரூ.30க்கும், உடன் எடுத்துச் செல்ல ரூ.60ம் கட்டணமும் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்தால் போதும். செல்லப்பிராணிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உடன் எடுத்து செல்ல வேண்டும். அதேபோல் செல்லப்பிராணிகளுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் இந்திய ரயில்வே தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 


இந்நிலையில்  வடகிழக்கு ரயில்வேயில் பயணிகள் பயணிக்கும் பெட்டிகளில் செல்லப்பிராணிகளுக்கு இடமளிக்கும் வகையில் ரயில் பெட்டிகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்தானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் செல்லப்பிராணிகளுக்கான பெட்டிகள் உள்ள நிலையில் விரைவில் மற்ற ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.