ரயில் நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ள உணவு நிலையங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் பயணம் செய்வோருக்கு அதிர்ச்சி தருவதாக இது அமைந்துள்ளது.
புதிய மெனுவும் திருத்தி அமைக்கப்பட்ட விலையும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்னென்ன பொருட்கள் விலை உயர்வு?
இதன்படி, 50 கிராம் கொண்ட ஓர் உருளைக்கிழங்கு போண்டா, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. அதேபோல அத்துடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு பன் (பாவ்) 5 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெஜ் சமோஜா, வெஜ் பஃப், ஜவ்வரிசி வடை ஆகியவை தலா 20 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளன.
அதேபோல வெஜ் பீட்ஸா மற்றும் பாவ் பாஜி ஆகியவை தலா 50 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளன. தென்னிந்திய உணவு வகைகளைப் பொறுத்தவரை மசாலா தோசை 35 ரூபாயாக விற்கப்பட உள்ளது. சாம்பார், சட்னியுடன் வழங்கப்படும் இட்லி 30 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
தரம் கட்டாயம்
விலையை உயர்த்திய ரயில்வே நிர்வாகம், வழங்கப்படும் உணவு வகைகளின் தரத்தை விற்பனையாளர்கள் கட்டாயம் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல பயணிகளின் வசதிக்காக, அனைத்துக் கடைக்காரர்களும் தங்களது விற்பனை நிலையங்களில் இருமொழி விலைப் பட்டியல்களைத் தெளிவாகக் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தொடர் ஆய்வுகள்
விற்பனையாளர்கள் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்யவும் நிலையங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், விலைவாசி அதிகரிக்க வாய்ப்புள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலையும் மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால் செலவுகள் அதிகரித்து, உணவகங்களில் உணவு விலை உயர்த்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.
கடும் அதிர்ச்சியில் ரயில் பயணிகள்
இதற்கு மத்தியில் இந்திய ரயில்வேயில் உணவு விலைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது, ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
