MT Yi Cheng 6 என்ற பலாவ் நாட்டு கப்பலில் தீப்பற்றி கொண்ட நிலையில், அதில் தீயணைக்கும் பணியிலும் மீட்பு பணியிலும் இந்திய கடற்படை ஈடுபட்டது.

கப்பலில் தீ விபத்து:

வடக்கு அரபிக் கடலில் சென்ற எம்டி யி செங் 6 என்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, களத்தில் இறங்கிய இந்தியக் கடற்படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியை மேற்கொண்டது. இதன் மூலம் 14 இந்திய மாலுமிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 29ஆம் தேதி அதிகாலை பணியில் ஈடுபட்டிருந்த ஐஎன்எஸ் தபார் கப்பலுக்கு, எம்டி யி செங் 6 கப்பலில் இருந்து மேடே என்ற ஆபத்துக்கான அழைப்பு வந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவிலிருந்து கிழக்கே சுமார் 80 கடல் மைல்கள் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருக்கும்போது, அதன் இயந்திர அறையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

களத்தில் இறங்கிய இந்திய கடற்படை: 

இதையடுத்து, உடனடியாக விரைந்த ஐஎன்எஸ் தபார் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்கள், தீ பிடித்த கப்பலில் தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, ஏழு பணியாளர்கள் உடனடியாக கப்பலின் படகுகளைப் பயன்படுத்தி ஐஎன்எஸ் தபாருக்கு வெளியேற்றப்பட்டனர்.

 

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அனைத்து பணியாளர்களும் தபாரின் மருத்துவக் குழுவால் பரிசோதிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக கேப்டன் உள்பட எஞ்சிய பணியாளர்கள் கப்பலிலேயே இருந்தனர். ஐஎன்எஸ் தபார், தீயணைப்பு உபகரணங்களுடன் ஆறு பேர் கொண்ட தீயணைப்புப் படையும் மற்றும் சேதக் கட்டுப்பாட்டுக் குழுவும்  இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: Watch Video: சிவகங்கை அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் போலீஸார்; வெளியான அதிர்ச்சி வீடியோ