கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் சர்வதேச விமான பயணத்திற்கு தொடர்ந்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் சர்வதேச விமான பயணத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான சர்வதேச விமான சேவையையும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் தற்போது சில நாடுகளில் மீண்டும் புதிய வகை கொரோனா பாதிப்பு உருவாகி வருகிறது. இதனால் இந்த கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு விரைவில் இது தொடர்பாக முடிவு வெளியிடப்படும் என்று இந்த சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






தென்னாப்பிரிக்கா நாட்டில் ஓமிக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது சர்வதேச விமான பயணிகள் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பின் வீரியம் தொடர்பாக இதுவரை நன்றாக தெரியவில்லை. ஆகவே இந்த வகை கொரோனா பாதிப்பை உலக சுகாதார மையம் மிகவும் ஆபத்தான வகையானதாக அறிவித்துள்ளது. 


இதன்காரணமாக இந்திய அரசு சர்வதேச விமான பயணிகளை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சர்வதேச விமான பயணகளிக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 96 மணிநேரத்திற்குள் இரண்டு முறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.




பி.1.1.529 என்ற புதிய வகை உருமாறிய  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்திற்கு மேலும் சில நாட்கள் தடை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க: பரக் அக்ராவல் நியமனத்தைக் கொண்டாடியது போதும்; மாத்தி யோசிங்க: Zoho CEO ஸ்ரீதர் வேம்பு