இந்தியாவில்,கடந்த நான்கு மாதத்தில் இல்லாத வகையில் டிசம்பர் மாத வேலைவாய்ப்பின்மை விகிதம்  7.91% ஆக அதிகரித்துள்ளது. இந்த விகிதம் நவம்பர், அக்டோபர் மாதத்தில் முறையே 7%, 7.75% ஆகவும்  இருந்தது.   


முன்னதாக, 2021  அந்த மாதத்தில், அதிகபட்சமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3% ஆக அதிகரித்து இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியது.   


நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை நவம்பர் மாதத்தில் 8.21% ஆக இருந்த நிலையில், தற்போது 9.30% ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று, கிராமப்புற வேலைவாய்ப்பின்மை  நவம்பர் மாதத்தில் 6.44% ஆக இருந்த நிலையில், தற்போது 7.28% ஆக அதிகரித்துள்ளது. 


இந்தியாவில், ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை கடைபிடித்தும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்தும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றன. 


டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதன் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில், மரபணு வரிசைப்படுத்தப்பட்ட மொத்த  வைரஸ் மாதிரிகளில், 14% மாதிரிகள் ஒமிக்ரான் மாறுபாடுகளுடன் இருந்தது. கடந்த வாரத்தில், 28 % மாதிரிகள்  ஒமிக்ரான் மாறுபாடுகளுடன் உள்ளது. எனவே, இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க, ஒமிக்ரான் மாறுபாடுகள் அதிகரித்து இருக்கிறது. டெல்டா  மாறுபாடுகள் இந்தியாவில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் மூன்றாவது அலையை  ஏற்படுத்தி வருகின்றன.  28 % மாதிரிகள் அதிகரிப்பு என்பது இந்தியா மூன்றாவது அலைக்குள் நுழைகிறது என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  


 



 


பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகும் பொருட்டு, நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மை மேலும் சரியத் தொடங்க வாய்ப்புள்ளது. ஊரடங்கின் ஆரம்ப கட்ட தொடக்கத்திலேயே, தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பது பலரையும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னதாக, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்  வேலைவாய்ப்பின்மை காரணமாக 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,294 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்குவதற்கு முன்பாகவே, 2019ல் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 24% (2016-ல் ஒப்பிடுகையில்) சதவிகிதமாக அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.